2025 ஜூலை 21, திங்கட்கிழமை

‘மின்சாரம் மற்றும் நீர்வெட்டு என்பனவற்றால் விரக்தியுற்று ஓட மாட்டோம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 20 நாட்களாகப் போராட்டம் நடத்தி வரும் தம்மீது மின்வெட்டு மற்றும் நீர்வெட்டு என்பனவற்றை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. எவ்வகையான இடைஞ்சல்கள் ஏற்படுத்தப்பட்டாலும் தமது போராட்டத்தை இடைநடுவில் கைவிட்டு  தோல்வியோடு ஓடி ஒழிந்து கொள்ள மாட்டோம். வெற்றி காணும் வரை ஓயாது போராடுவோம் என போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக மற்றும் பேரவைக் கட்டடத்தை ஆக்கிரமித்து தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்களை அங்கிருந்த வெளியேறுமாறு கோரி, நீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழக கவுன்ஸில் ஆகியவை விடுத்த உத்தரவையும் மீறி, அப்பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், வந்தாறுமூலை வளாகத்தில் 20ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்றது.

தமது சக மாணவர்கள் மீதான முறையற்ற வகுப்புத்தடைகளை நீக்குமாறும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ள 2ஆம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகளைப் பெற்றுத் தருமாறும் அசிரத்தையாக உள்ள பல்கலைக்கழக  நிர்வாகத்தை கண்டித்தும், தமது பிரதான தேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடாமல்  தாம் பேரவைக் Senateகட்டடத்தினுள் தங்கியிருந்து வருவதாக மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேவேளை, மாணவர்கள் ஆக்கிரமித்துள்ள குறித்த கட்டடத்துக்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் என்பன கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடைப்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மின்பிறப்பாக்கி மூலம் மின்னொளியையும், அங்குள்ள கிணறுகளைத் துப்பரவு செய்து கைகளால் நீரை அள்ளிவந்து தமது நீர்த் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, நீர் வெட்டினால் அவஸ்தைப்படும் பல்கலைக்கழகத்தில் வளர்க்கப்படும் மாடுகளுக்கும் தாம் தாகம் தீர்த்து வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஊர் ஊராகச் சென்று தமது போராட்டத்தை நியாயப்படுத்தும் பிரசாரங்களையும் மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X