2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும்’

Editorial   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க வேண்டுமென, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், முன்பள்ளி ஆசிரியருக்கென தற்போது வழங்கப்படுகின்ற கொடுப்பனவை, உரிய மாதத்துக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும், கிழக்கு மாகாண சபையின் ஆளுநருக்கு நேற்று (29) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் கீழ், டிப்ளோமா பட்டப்படிப்பை முடித்த 3,548 பேர், தங்களைப் பதிவுசெய்து, முன்பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய அவர், அவர்கள் பணியாற்றும் இடங்களையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,150 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 1,850 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 850 பேரும் பணியாற்றி வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த ஆசிரியர்கள், குடும்பச் சுமைகளைச் சுமந்துகொண்டும் பொருளாதாரக் கஷ்டத்துக்கு மத்தியிலும், சேவை அடிப்படையில், சிறார்கள் ஒவ்வொருவரையும் தங்கள் சொந்தக் குழந்தைகளைப் போல் பராமரித்து வருகின்றனர்.

“இவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 3,000 ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிதியைக் கூட வழங்குவதில், கால தாமதங்கள் ஏற்படுகின்றன. கணினி மயமாக்கப்பட்டுள்ள இந்த யுகத்தில், பாலர் பாடசாலை பணியக நிர்வாகம், சீராக இல்லையா எனும் கேள்வி எழுப்பப்படுகின்றன.

“எனவே, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை, மாதம் குறைந்தது 5,000 ரூபாயாக மாற்ற, துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X