2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'ஆசிரியர் சேவைப் பதவியுயர்வு கிழக்கில் அமுலாகவில்லை'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 02 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிப்படி ஆசிரியர் சேவையிலுள்ளவர்களை பதவி உயர்வு செய்வதற்கான  வேலைகள் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் பூர்த்தியாகவில்லையென மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அவர், விடுத்துள்ள அறிக்கையில் 'புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கமைய, 2008ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ஆசிரியர் சேவையில் எந்தப் பதவியில் இருக்கின்றார்களோ, அவர்களை உள்வாங்கி பதவி உயர்வுகளைச் செய்யுமாறு கல்வியமைச்சு அதிகாரிகளைப் பணித்து இதற்கான சுற்றுநிரூபத்தையும் அனுப்பியது. செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னராக பதவி உயர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட வேண்டுமென்று கல்வியமைச்சு தனது பணிப்பில் குறிப்பிட்டிருந்தது.

ஆயினும், புதிய அரசாங்கத்தின்; பணிப்புரைக்கமைய ஆசிரியர் சேவையிலுள்ளவர்களை பதவி உயர்த்துவதற்கான வேலைகள் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் பூர்த்தியாகவில்லை. ஒரு சில கல்வி வலயங்களில் இந்தப் பதவி உயர்வுக்கான வேலைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னமும் தொடங்கவில்லை. அதேவேளை, இந்தப் பதவி உயர்வுக்கான வேலைகளை மாகாணத்திலுள்ள  ஏனைய கல்வி வலயங்களும் பூர்த்தியாக்கவில்லை.

சுற்றுநிரூபத்திலுள்ளதை மத்திய கல்வி அமைச்சிலிருந்து அதிகாரிகள், கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி அதிகாரிகளுக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தெளிவுபடுத்தியிருந்தனர். அவ்வாறிருந்தும், இதற்கான வேலைகள் பூர்த்தியாகாமை கவலையளிக்கின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X