2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'ஆயுதக் கலாசாரம் அழிக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

'எமது நாட்டில் ஆயுதக் கலாசாரம் முற்றாக அழிக்கப்படும் பட்சத்திலேயே சகோதர இனங்களுக்கிடையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த முடியும்' என ஏறாவூரைச் சேர்ந்த சின்னத்தம்பி உசனார் (வயது 64) தெரிவித்தார்

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்தறியும் அமர்வு, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.  

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,  '1985ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழ் மக்களுடன் மிகவும்; ஐக்கியமாக நான் பழகியுள்ளேன். அத்துடன், வெருகல் பிரதேசத்தில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவந்தேன். மேலும், சில காலத்தின் பின்னர் கரடியனாறு சிவத்த போக்கடி பகுதியில் தமிழ் உறவுகளுடன் இணைந்து நெல் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டேன். 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வேளாண்மை அறுவடை செய்ய ஆயுத்தமாக இருந்த வேளையில் ஏறாவூர்ப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்களை படுகொலை செய்தனர்.

அந்த நிலையில் அறுவடை வேலைகளை கைவிட்டு உயிர்தப்பி ஏறாவூருக்கு வந்தேன். அறுவடைக்கு தயாராகவிருந்த நெல் வேளாண்மையினை விடுதலைப் புலிகள்  அறுவடை செய்து நெல்மூடைகளை ஏற்றிச் சென்றதாக அறிந்தேன்.
 
அதன் பின்னர் எனது வயலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எனது தொழில் துறை அனைத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கான இழப்பீடு எதனையும் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக பல இடங்களில் முறைப்பாடு செய்துள்ளேன். இதற்கான இழப்பீடு பெற்றுத்தருவதுடன் மீண்டும் வாழ்வாதார தொழிலை செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
 
இந்த நாட்டில் ஆயுத கலாசாரம் இருந்ததினாலேயே எனக்கு இந்த நிலை ஏற்பட்டதாக உணர்கின்றேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X