2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'இந்த வருட ஆரம்பத்தில் சிறுபான்மையின மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 03 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இனிமேலும் தமிழ் மக்களால் பொறுமை காக்க முடியாது என்பதுடன், இந்த வருட ஆரம்பத்தில் சிறுபான்மையின மக்களுக்கு சரியான தீர்வை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்னும் கால நீடிப்பை வழங்கித் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்ற நிலைமைக்கு த.தே.கூ தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வர்த்தகத் துறையினர், வர்த்தகத்துறை மாணவர்கள் உட்பட பல்வேறு துறை மாணவர்களையும் இணைத்து மட்டக்களப்பு வர்த்தக யூனியன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, பி.பி.சி கல்வி நிலையத்தில் திங்கட்கிழமை (02) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'இந்த நல்லாட்சியில் 2 வருடங்கள் கடந்துள்ளன.  சிறுபான்மையின மக்களின் எதிர்பார்ப்புகள்  இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனை அனைத்து அரசியல் தலைமைகளும் உணர வேண்டும்' என்றார்.

'இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல்; மாறி, மாறி ஆட்சி செய்த அரசாங்கங்களானது தமிழ் பேசும் மக்களை அரவணைத்துச் செல்லாமல், அவர்களின் நியாயமான உரிமையை வழங்காமல் ஏமாற்றி வந்தது.

கடந்த அரசாங்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்குமாறு கோரினோம்;. அந்த அரசாங்கம் தீர்வை வழங்கவில்லை.

இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் சிறுபான்மையினச் சமூகங்களானது மதவாதம், பேரினவாதத்தை விரும்பாத பெரும்பான்மையின மக்களுடன் இணைந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின.

புதிய ஆட்சி மாற்றத்துக்காக சிறுபான்மையின மக்களின் தலைமைத்துவங்களும்; பணியாற்றின.
பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள்  ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
நிம்மதியாக வாழ வேண்டும், கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், சிறையிலுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அவை வழங்கப்பட வேண்டும் போன்றவற்றைக்   கருத்திற்கொண்டே சிறுபான்மையினச் சமூகங்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின.

சிறுபான்மையின மக்கள்  கூறுவதைப் பெரும்பான்மையினச் சமூகம் கேட்க வேண்டுமாயின்,  சிறுபான்மையினச் சமூகத்துக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமாயின், கல்வியில் உயர வேண்டும். பொருளாதார ரீதியாக வளர வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X