2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'இனப்பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 17 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா,பைஷல் இஸ்மாயில். எம்.எஸ்.எம்.ஹனீபா 

கிழக்கு மாகாணத்தில்; பாரிய இனப்பிரச்சினையை ஏற்படுத்துவதற்கான  முயற்சிகள்  சிலரால்  திட்டமிட்ட  வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,'இவ்வாறான சதிகாரர்களுக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள  அரசியல்வாதிகள் சிலர் ஒத்துழைப்பு வழங்குவது தற்போது வெளிப்பட்டுள்ளதுடன், அவர்களின்  உண்மையான  முகங்களை மக்கள்  அடையாளம் காண்பதற்கு  சரியான தருணம் எழுந்துள்ளது.

அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில்  தமிழ், முஸ்லிம் மக்களின்  பூர்வீகப் பகுதிகளில் ஆங்காங்கே திடீரென  முளைக்கும் புத்தர் சிலைகள் மற்றும்  மட்டக்களப்பில்  பலவந்தமாக பெரும்பான்மையினக் குடியேற்றங்களை நிறுவ  முனைதல்  ஆகிய விடயங்கள் சிறுபான்மையின  மற்றும் பெரும்பான்மையின மக்களுக்கு இடையில் திட்டமிட்ட  வகையில்   மோதலை  ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் சதித்திட்டம் ஆகும்' என்றார்.

'யுத்தத்தைக் காரணங்காட்டி பிழைப்பு நடத்திய அரசியல்வாதிகள் தற்போது யுத்தம் இல்லாதபோது,  அரசியல் நடத்துவதற்கு முடியாது  என்ற யதார்த்தத்தை அறிந்துகொண்டு, இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை  முளையிலேயே அரசாங்கம்   கிள்ளி எறிய வேண்டும் என்பதுடன்,  இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகள் கொண்டுசெல்லப்படுவதாகவும் போலியான கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டுசென்று அவர்களை குழப்பத்துக்கு உட்படுத்தி இலாபம் அடைவதற்கான விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு பாரிய திட்டங்களை வகுத்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், இங்கு  பிரச்சினையை உருவாக்கி அவற்றுக்கு முட்டுக்கட்டை இடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.
எவ்வாறான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், மக்களின் ஒத்துழைப்புடன் அவற்றை முறியடித்து கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி அடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற எனது முயற்சியிலிருந்து பின்வாங்கப் போவதில்லை' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X