2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'இனி எவரும் இனவாதத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த முடியாது'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

இனவாதத்தை தமது அரசியல் அரியணைக்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு இனியொருபோதும் மக்கள் அனுமதிக்கமாட்டார்களென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர், புன்னைக்குடா கடற்கரை வீதி மற்றும் மீராகேணி சவுக்கடிப் பிரதேசத்தை இணைக்கும் வீதி ஆகியன சுமார் 4 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பதற்கான வேலை ஞாயிற்றுக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டது. 

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இனவாதத்தை ஒழித்து நல்லாட்சியைக் கொண்டுவர வேண்டுமென்பதில் சிறுபான்மை மக்களுடன் சேர்ந்து பெரும்பான்மை மக்களும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். ஆகையால், இனியொருபோதும் இனவாதம் தலைதூக்குவதற்கு இந்நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்' என்றார்.

'பாதயாத்திரை சென்ற மஹிந்த அணியிலுள்ள பலர், இப்போது நல்லாட்சியுடன் ஒட்டிக்கொள்வதற்காக ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் இரவோடுடிரவாக மந்திராலோசனை நடத்திவருகின்றனர். இனவாதம் இனிக் கோலோச்சாதென்பதில் ஐக்கியத்தை விரும்பும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அக்கறையுடன் இருக்கின்றனர்.

ஐக்கியமாக வாழ்வதற்கும் ஒன்றுபட்ட மக்களாக ஓரணியில் ஆட்சி செய்வதற்கும் இப்பொழுது கிழக்கு மாகாணம் முன்னுதாரணமாகத்; திகழ்கிறது.

எமது ஆட்சியில் எல்லா இன, மதக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பார்வையாளர்களாகவன்றி பங்காளர்களாக இருக்கின்றோம். இதனையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் அடுத்த மாகாணங்களுக்கும் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கின்றார்' என்றார்.

'கிழக்கு மாகாணத்தில் நாம் குறுகிய காலத்தில் அமுல்படுத்தியுள்ள பொருளாதார முதலீட்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பிரதமர் தென்னிலங்கைக்கும் நாட்டின் இதர மாகாணங்களுக்கும் அறிமுகப்படுத்தி வருகின்றார். எனவே, நாட்டுக்கு முன்னுதாரணமான பொருளாதார அபிவிருத்தி முதலீட்டுத் திட்டங்களை நாம் வகுத்துக்கொடுத்துள்ளோம்.

இலங்கையில் எங்குமே இல்லாத தொழில்நுட்ப பூங்காக் கிராமமொன்றை மட்டக்களப்பில் உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் நேரடியாக 50 ஆயிரம் இளைஞர், யுவதிகள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவாகமுடியும். அதேவேளை, அவர்கள் மாதாந்தம் இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டமுடியும்.
கிழக்கு மாகாணத்தில் கல்வி அபிவிருத்திக்காக 7,500 மில்லியன் ரூபாயைக் கொண்டுவந்துள்ளோம். உள்ளூராட்சிமன்ற நிர்வாகத்தின் கீழ்வரும் 400 கிலோமீற்றர் பாதைகளை அமைப்பதற்காகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பராமரிப்பிலுள்ள 200 கிலோமீற்றர் பாதைகளை அமைப்பதற்காகவும் ஆயிரம் கோடி ரூபாயைக் கொண்டுவந்துள்ளோம்.
சுகாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 110 கோடி  ரூபாயும் மேலும் 180 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் மாகாண சபைக்குக் கொண்டுவந்துள்ளோம்.

இன்னும் 155 கோடி ரூபாயை மத்திய அரசிலிருந்து கிழக்கு மாகாணத்தின் பங்காக நாம் பறித்துக்கொண்டு வந்து அபிவிருத்தி செய்வோம். அந்தப் பொறுப்பு கிழக்கு மாகா முதலமைச்சருக்கு இருக்கின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X