2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'எமது மடியில் கைவைக்க எவருக்கும் இடமளியோம்'

Niroshini   / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

எமது தோழில் கைபோட்டு தோழமையாக இருக்கலாம். ஆனால், எங்கள் மடிகளில் கைவைத்து எமது உரிமைகளை பிடுங்குவதற்கு எவருக்கும் நாம் இடமளிக்க மாட்டோம். இதில் நாம் மிகவும் உறுதியாக இருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை(01) நடைபெற்ற வாகனேரி இத்தியடிப் பிள்ளையார் ஆலய அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறைவன் வைதாரையும் வாழவைப்பான். இங்கு யாரோ ஒரு விசமியினால் மேற்கொள்ளப்பட்ட காரியம். இதனை நாம் நீட்டிக்கொண்டு போகக் கூடாது. அவ்வாறு விசமியினால் மேற்கொள்ளப்பட்ட விடயம் நல்லதொரு காரியத்தினைச் செய்திருக்கின்றது.

இந்த ஆலயத்துக்கு ஏற்கனவே ஒருமுறை இவ்வாறு இடம்பெற்றது. இதன் பின்புதான் இங்கு ஆலயம் அமைப்பது தொடர்பில் ஒரு கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின் அண்மையில் மீண்டும் ஒரு அசம்பாவிதம் இடம்பெற்றது. அதன் விளைவே இந்த ஆலயம் பெரிதாக அமைப்பதற்குரிய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சாதாரணமாக ஆலயம் அமைப்பதற்கு கல்வைக்கும் நிகழ்வாக இருப்பின் இத்தனை பேர் வந்திருக்க மாட்டார்கள். ஆனால் நம்முடைய சகோதரரர் செய்யக் கூடாத ஒன்றைச் செய்திருக்கின்றார். ஆனால் அவரை அறியாமலே அவர் நல்லதொரு காரியத்தினைச் செய்திருக்கின்றார். எனவே அவரையும் நாம் வாழ்த்த வேண்டும்.

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இடையில் இருக்கும் சிறு சிறு குழப்பக்காரர்களால் தான் பிரச்சினை ஏற்படுகின்றது. அதனை நாம் பெரிய அளவில் எடுத்துக் கொண்டு இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றோம்.

இவற்றில் ஊர்த்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டின் தலைவர்கள் எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறான குழப்பங்களை பெரிய நெருப்பாக வளர்ப்பதற்கு எந்த விதத்திலும் தலைமைகள் அனுசரணையாக இருக்கக் கூடாது, இடம்கொடுக்கவும் கூடாது என்றார்.

இந்நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர் ஜீ.கிருஸ்ணபிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 24ஆம் திகதி இவ்வாலயத்தின் உருவச்சிலை இனந்தெரியாத நபர்களால் தூக்கி எறியப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து பிரதேச பொதுமக்களின் முயற்சியினாலும் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பின் மூலமும் இப்பிள்ளையார் ஆலயத்தினை புதிதாக அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X