Niroshini / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
“மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழ், கடந்த 30 வருடகால யுத்தத்தின் ஒட்டுமொத்த வலிகளைச் சுமந்த பெண்களைப் புறக்கணித்து விட்டது” என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மேலும், “எழுக தமிழ் நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள், மேடையில் ஏறிப் பேசுமாறு என்னை வலியுறுத்தினர். ஆனால், அழைக்காமல் மேடையேறுவது அகௌரவம் என்பதை அந்தப் பெண்களுக்குச் சொல்லி வைத்தேன். ஒட்டுமொத்தத்தில் கிழக்கு எழுக தமிழ், பெண்களைப் பிரதிபலிக்கத் தவறிவிட்டது” எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழ் நிகழ்வு குறித்து ஊடகங்களுக்கு நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“யாழ். எழுக நிகழ்வுகளில் கூட, தீர்வுத் திட்டம் குறித்துப் பிரஸ்தாபிக்கும்போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேவைகள், தீர்வுகள் குறித்து ஆலோசனைகள் பெறப்படவில்லை.
தமிழ் மக்கள் பேரவையும் எழுக தமிழும், தன்னுடைய பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
“எழுக தமிழின் பிரகடனத்தில், காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் என்று தமிழ் மக்களின் பல விவகாரங்கள் கூறப்பட்டிருந்ததால், அதில் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் நானும் சக மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் சிவநேசன் மற்றும் 35 பெண்களோடு யாழ்ப்பாணத்திலிருந்து எனது சொந்தச் செலவில் வந்து கலந்துகொண்டேன். ஆனால், எழுக தமிழ் நிகழ்வில் பேசியவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தார்கள்.
“இந்நிலையில் தமிழ்ப்பேரவையில் பெண்ணுரிமை பெண்களுக்கான சமவாய்ப்பு பற்றி எப்படி கதைப்பது? பெண்களுக்கு இடமில்லாத அப்பேரவையில் எதிர்காலம் எவ்வாறிருக்கும்” என்றார்.
“வடக்கு - கிழக்கு சார்ந்து, பெண்கள் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். வெளிநாடுகளில் நிதி சேகரிக்கின்ற அமைப்புக்கள் தங்கள் சொகுசுக்காக அவற்றை மேற்கொள்ளாது, பாதிக்கப்பட்டு துயரத்தோடு நாளாந்த வாழ்க்கையில் துவண்டு கொள்ளும் பெண்களுக்காக செயற்பட வேண்டும். நலிவடைந்த பெண்களை வளர்ப்பதற்கான அமைப்புக்கள் தேவை” எனவும் குறிப்பிட்டார்.
57 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
6 hours ago