2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'கருத்தரங்கு நடத்தியமை சட்டவிரோத செயற்பாடு'

Niroshini   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மூன்றாம் தர அதிபர் தேர்வுக்கான போட்டிப் பரீட்சையில் தோற்றவுள்ள ஆசிரியர்களின் நலன் கருதி நடத்தப்பட்ட  கருத்தரங்கு பாடசாலை நேரத்தில் நடத்தப்பட்டமையானது சட்டவிரோத செயற்பாடாகும் என கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பான அதிருப்தி மனுவொன்றைத் தமது அமைப்பு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், ஆளுநர், மாகாணக் கல்வி அமைச்சர்,திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உவர்மலை மத்திய வீதியில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற இக்கருத்தரங்கு வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் இச்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களாக கருதப்படும் திருக்கோணமலை வலயத்துக்குட்பட்ட சில பாடசாலை அதிபர்கள், கடமை நேரத்தில் திணைக்கள அனுமதி பெறாமல் காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 5.00 வரை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கெடுத்திருக்கின்றார்கள்.

அத்தோடு 60ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருகை தந்துள்ளனர். ஆனால் பாடசாலையில் கையொப்பமிட்ட பின்னரும் சிலர் குறுகியகால விடுமுறையிலும் செல்வதற்கு அதிபர்கள் அனுமதித்துள்ளனர்.

இதனை சட்டவிரோத செயற்பாடாகவே கருதமுடிகின்றது.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு தங்களால் அனுப்பபட்ட சுற்று நிரூபத்தில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளைப் பாதிக்காத வகையில் இணைப் பாடவிதானச் செயற்பாடுகள் மட்டுமன்றி அனைத்துச் செயற்பாடுகளையும் பாடசாலை முடிவடைந்த பின்னர் அல்லது விடுமுறை தினங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

அது அவ்வாறிருக்க இந்த செயலமர்வுக்கு அனுமதி வழங்கியது யார்? அத்தோடு இச்செயலமர்வினை ஒழுங்குபடுத்திய கோட்டக்கல்விப் பணிப்பாளர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆசிரியர்களைக் கலந்து கொள்ளவைத்தாரா எனவும் நாம் சந்தேகிக்கின்றோம்.

மேலும், ஒரு ஆசிரியரிடமிருந்து 500 ரூபாய் பணமும் பெறப்பட்டுள்ளது. இது எமது சந்தேகத்துக்கு வலுசேர்ப்பதாகவே அமைகின்றது.

எனவே, இவ்விடயங்களைத் தங்களின் மேலான கவனத்துக்கு சமர்ப்பிப்பதன் மூலம் நியாயம் கிடைக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X