Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்,றியாஸ் ஆதம்
இனப்பிரச்சினைத் தீர்வுக்காக புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்தறியும் சர்வஜன வாக்கெடுப்பு அடுத்த வருட முற்பகுதியில் நடத்தப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இந்நாட்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகத்தெளிவாக உள்ளார். அதற்காக நல்லாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்றம் ஒரு சட்டசபையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்சபை மிக விரைவில் இந்நாட்டினுடைய சட்டத் திருத்தத்தைச் செய்து இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட யோசனையை முன்வைக்கவேண்டும். அந்த யோசனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுமெனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற 10 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர் இணைப்புகளை வழங்கும் திட்டத்தின் கீழ், ஏறாவூர்ப் பிரதேசத்தில் 500 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்கான கொடுப்பனவுக் காசோலைகள் கலாசார மத்திய நிலையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (21) மாலை வழங்கப்பட்டன. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கான யோசனைகள் புதிய அரசியல் யாப்பில் உள்வாங்கப்படவுள்ளன. இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சில முஸ்லிம் சகோதரர்களும் கூறுகின்றனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், வடக்கும் கிழக்கும் இணைவது தொடர்பில் பேசவேண்டும். கலந்துரையாடித் தீர்மானம் எடுக்க வேண்டுமென்று அண்மையில் அறிக்கை விடுத்துள்ளார். ஆனால், வடக்கும் கிழக்கும் இணைவதை ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. இவ்விடயத்தில் நாம்; மிகத்தெளிவாக இருக்கவேண்டும்' என்றார்.
'கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றோம். இனப்பிரச்சினைக்குத் தீர்வு வடக்கையும் கிழக்கையும் இணைப்பதல்ல. மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். ஒரு சுயேட்சையான அரசு மாகாணங்களில் இயங்க வேண்டும். மாகாணங்களிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய அதிகாரப்பகிர்வுகள் வழங்கப்பட வேண்டுமே தவிர, மீண்டும் இனங்களுக்கிடையில் மோதல்கள் உருவாகின்ற ஒரு சபையும் அலகும் உருவாகுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது' எனவும் அவர் கூறினார்.

11 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
31 minute ago