2025 மே 14, புதன்கிழமை

'தனியார் சட்டம் சமூகத்துக்குக் கிடத்த வரப்பிரசாதம்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம் தனியார் சட்டம் சமூகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடியில் இன்று நடைபெற்ற மகளிர் சங்க பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

சட்டமானது விதிகளின் பிரதிபலிப்பாகும்.விதிகளை விட்டு விலக முடியும். ஆனால் சட்டத்தை விட்டு விலக முடியாது. அத்துடன் சட்டம் பற்றி ஒருவரின் சொந்தக் கருத்து கவனத்திற் கொள்ளப்படமாட்டாது. எனவே தனியார் சட்டம் சமூகத்துக்குக் கிடத்த வரப்பிரசாதமாகும்.

இலங்கையில் தனியார் சட்டங்களில் முழு இஸ்லாமிய சமயத்தினர்களுக்கும் உரித்தான சட்டமாக முஸ்லிம் சட்டம் இருக்கின்றது.

இச்சட்டத்தின் மூலம்  திருமணம், விவாகரத்து மற்றும் வக்பு சபை போன்ற விடயங்களை கையாள முடியும். ஆனால் இலங்கையில்  'ஷரீஆ' சட்டம்  நடைமுறையில் உள்ளது என தவறாக எவரும் நினைத்து விடக் கூடாது.

இலங்கை நாட்டிலுள்ள முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனையோர்கள் ஒரு பதிவுத் திருமணம் செய்யும் போது 18 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இஸ்லாமியர்களுக்கு இவ்வயதுக் கட்டுப்பாடு இல்லை.பன்னிரெண்டு வயதுக்கு மேல் 'நிகாஹ்' செய்யலாம்.

இஸ்லாத்தின் அடிப்படையில் பக்குவமான ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய முடியும். இது ஏனைய முஸ்லிம் நாடுகளில் வெவ்வேறு  வயதுகளைக் கொண்டிருக்கிறது.

அத்துடன்  சட்ட ரீதியாக நான்கு திருமணம் முடிப்பதற்கான அங்கீகாரத்தையும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் 'காழி' நீதிபதியின் அனுமதியுடன் இச்சட்டம் வழங்கியுள்ளது.

ஏனைய சமயத்தினர் ஒரு திருமணம் வலிதாக இருக்கும் போது, மற்றுமொரு திருமணம் செய்வது ஏழு வருடம் சிறைத்தண்டணை வழக்கக்கூடிய குற்றமாகும்.நீதியின் போக்கானது சமமானவற்றை சமனான முறையில், சமனற்றவற்றை சமனற்ற முறையிலும் நடத்துதல் ஆகும்.

தனியார் சட்டம், பகிரங்க சட்டம் என இரண்டு சட்டங்கள் உள்ளன. இங்கு தனிப்பட்ட சட்டம் என்ற வகையில் ஆட்கள் சட்டம், ஆதனச் சட்டம், ஒப்பந்த சட்டம் என்பன முக்கியமானவை.

ஆனால் நீதி, நிருவாக சட்டம், குற்றவியல் சட்டம் என்பன பொதுச் சட்டங்கள் ஆகும். ஏனெனில் சமூகத்தில் கடமைகள், உரிமைகள் பற்றி அவைகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X