2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'தலைமைத்துவ மாற்றங்கள் நாட்டை வளமுள்ளதாக மாற்றும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிராம மட்ட  இளைஞர்களிடம் ஏற்படுகின்ற தலைமைத்துவ மாற்றங்கள் இந்த நாட்டை வளமுள்ளதாகவும் ஸ்திரமானதாகவும் மாற்றியமைக்க உதவும் என ஏறாவூர் நகர பிரதேச செயலாளர்
எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சத்தாம் ஹுஸைன் கிராமத்தில் பஸ் தரிப்பிடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டிவைக்கப்பட்டது. 'ஆற்றலுள்ள இளைஞர்கள்' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இப்புதிய பஸ் தரிப்பிடம் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்  நிர்மாணிக்கப்படவுள்ளது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தற்போதைய அரசின் கவனம் நாட்டிலுள்ள இளஞ்சமுதாயத்தினர் மீது திரும்பியுள்ளது. இளைஞர்களின் அபிவிருத்திக்காக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

தொழில் வாய்ப்பு, பயிற்சி, கல்வி என்று பல்வேறு இளைஞர் நலத்திட்டங்களுக்காக நிதி செலவிடப்படுகின்றது. ஏனென்றால், இந்த நாட்டை சீர்படுத்தக்கூடிய ஆற்றல் எதிர்காலத் தலைவர்களான இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது. அதேவேளை, எதிரிடையாக ஒரு நாடு சீரழிவதற்கும் கூட இளைஞர்களின் சக்தி வழிவகுக்கும். இப்போது நாட்டில் பரவியுள்ள போதைவஸ்து வர்த்தகம் இளைஞர்களைக் குறிவைத்தே நடத்தப்படுகின்றது.

தற்போது போதைவஸ்துப் பாவனை, சிறுவர் தொழில், சிறுவர் துஷ்பிரயோகம், மதுபானப் பாவனை, பாடசாலை இடைவிலகல், நடத்தைப் பிறழ்வுகள், சிறுவர் பெண்கள் உரிமை மீறல் என்று பல்வேறு பிரச்சினைகளில் இளஞ்சமுதாயம் சிக்கியுள்ளது.

கிராம மட்டங்களில் ஏற்படுகின்ற இளைஞர் தலைமைத்துவ மாற்றத்தினூடாக அந்தப் பகுதியின் மனிதவளமும் ஏனைய இயற்கை வளங்களும் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டால் அது சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்த இந்த நாட்டை ஸ்திரப்படுத்த உதவும்.

இளைஞர்களை வலுப்படுத்துவதன் மூலம் கிராமமும், அந்த இளைஞர்கள் சார்ந்திருக்கின்ற சமூகமும், பிரதேசமும் ஒட்டு மொத்தத்தில் நாடும் வலுப்பெற முடியும்.

இளைஞர்கள் தங்களது இளமைப் பாதையை சரியாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வெற்றி பெற முடியும். நாட்டின் பாதகமான சூழ்நிலைகளிலிருந்து  இளைஞர்களை விடுவித்தால் நாட்டை அழிவுப்பாதையிலிருந்து விடுவிக்க முடியும், இதற்கு ஆற்றலுள்ள இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து தலைமைத்துவப் பொறுப்பை எடுத்து வழிகாட்டி நாட்டை வளப்படுத்த வேண்டும்.' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X