2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'தவறு செய்தவர் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 22 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
'தேரர் ஒருவர் தவறாக நடந்துகொண்டிருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த பௌத்தர்களையும் புண்படுத்தக்கூடிய வகையில் நாம் பேசக்கூடாது. யார் தவறு செய்தாரே, அவர் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு, ஆறுமுகத்தான் குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (21) நடைபெற்ற முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'தற்போது நாட்டில் உருவாகியுள்ள சமாதானச் சூழ்நிலையை மத ரீதியில் குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். மதமானது மக்களைச் சிறந்த இடத்துக்கு அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். அதை மதப்  பெரியார்கள் செய்திருக்கின்றனர்.
 
மற்றவர்களை நசுக்குவதற்கான ஆதிக்க சக்தியாக மதத்தை யாரும் எடுக்கக்;கூடாது. இதனாலேயே,  எங்களுடைய கட்சி மதச் சார்பற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. எங்களுடைய கட்சியானது எந்த மதத்தையும் தூக்கிப் பிடிப்பதற்கோ அல்லது நசுக்குவதற்கோ அனுமதியளிக்காது' என்றார்.

'தற்போது சிலர் மதத்தை முன்னிறுத்தி நாட்டில் குழப்ப நிலைமையைத் தோற்றுவிப்பதற்கு முனைகின்றனர்.

மதத்தின் பெயரால் நாட்டைக் குழப்புகின்றவர்கள் தொடர்பில் இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும் என்று ஜனாதிபதி பணித்துள்ளார். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தற்போதைய சமாதானத்தை குழப்புவதற்கு தயாராக உள்ளனர்.
 
தற்போது இடம்பெறும் குழப்ப நிலைமையை இக்காலகட்டத்தில் உணர்வு பூர்வமாக அணுகாமல், அறிவு பூர்வமாகக் கையாள வேண்டும்.
 
இனிமேல் எங்களுடைய பிள்ளைகள் ஆயுதம் ஏந்தவோ கண்ணீர் விடவோ விட்டுச்செல்ல மாட்டோம் என்ற துணிவுடன் நாம் செயற்படுகின்றோம். அதற்காக நாம்; விட்டுகொடுப்புகளைச் செய்கின்றோம் என்று அல்ல மிகக் கவனமாகக் கையாளவேண்டும். நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வைப் பெறக்கூடிய வகையில் செயற்படுகின்றோம்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X