2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் தமிழ் மக்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

'ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எங்கள் மீதான  நம்பிக்கையை அதிகரிக்கும்; வகையில் தமிழ் மக்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, முனைத்தீவுப் பல்தேவை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) கைம்பெண்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'நாங்கள் நாட்டைப் பிரித்தெடுத்து இந்தியத் தமிழர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போகின்றோம் என்ற அச்சம் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆகவே, இந்த மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் நாம் மாற வேண்டும். அவ்வாறிருந்தால் மாத்திரமே எங்களின் உரிமைகளைப் பெற முடியும். இன்றைய காலகட்டத்தில் நாட்டைக் குழப்பாதளவுக்கு நாம் செயற்பட வேண்டும்' என்றார்.

'மேலும், தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எங்களின் உரிமை விடயத்தில் சிறு முன்னேற்றம் காணப்படுகின்றது. இதனை நாங்கள் காண்கின்றோம். அரசியல் வரலாற்றில் அரசியல் சீர்திருத்தத்தில் தற்போதே தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடப்பட்டு வருகின்றன. இதனை விட்டால் சந்தர்ப்பம் கிடையாது.

நாடாளுமன்றத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன் ஊடாக எமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ள இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அது மாத்திரமின்றி, 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்களால் இது அங்கிகரிக்கப்பட வேண்டும். இதனை நாங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இதற்காக நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின்  நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்.

நாங்கள் எதிர்க்கட்சியிலிருந்து செய்ய முடியாத வேலைகளையும் செய்துகொண்டிருக்கின்றோம்.
நாங்கள் கிழக்கு மாகாணசபையைப் பொறுப்பெடுத்து ஒரு வருடமும் 09 மாதங்களும் கழிந்துள்ளன. மாகாணசபையில் இருந்துகொண்டு  ஒரு செயற்பாட்டை சரியாகச் செய்ய வேண்டுமாயின், 05 வருடங்கள் எமக்குத் தேவை.
எமது மாகாணசபையில் முன்னர் இருந்தவர்கள் ஒழுங்குமுறையின்றி பல தரப்பட்ட வேலைகளைச் செய்துள்ளனர். அவற்றையும்; சரி செய்துகொண்டு செல்ல வேண்டிய நிலைமை எமக்கு இருக்கின்றது' எனவும் அவர் கூறினார்.  
 
 
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X