2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'பாதுகாப்பு, பராமரிப்பினால் சிறந்த சமூதாயத்தை கட்டியெழுப்பலாம்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சிறுவர்களுக்குப் பாதுகாப்பும் தகுந்த பராமரிப்பும் வழங்குவதனூடாக சிறந்த சமூதாயத்தைக் கட்டியெழுப்ப முடியுமென ஏறாவூர் நகரப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.

ஏறாவூர் கலாசார மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  ஏறாவூர் பிரதேச செயலக சிறுவர் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஏறாவூர் பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி எம்.எச்.சபூஸ் பேகம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கல்வியை அவசரமாகக் கற்க ஆசைப்படுகின்ற ஒரு காலச் சூழலுக்குள் எமது சிறார்கள் தள்ளப்பட்டுள்ளனர். வளர்ந்தவர்களாகிய நாம் எம்மைச் சூழவுள்ள சிறுவர்களுக்கு வழங்குகின்ற பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் வழிகாட்டல் என்பவற்றினூடாக எதிர்கால சமூகத்தை வளப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுட வேண்டும். இதனூடாக எம்மை முதுமைப் பருவத்தில் பாதுகாத்து பராமரிக்கக்கூடிய வளமான சமூகமொன்றை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்.

இப்பொழுது சிறுவர்களைச் சூழ்ந்துள்ள ஆபத்துக்களைப் பற்றி நாளாந்தம் சிலாகித்துப் பேசக்கூடிய அளவுக்கு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த சம்பவங்களின் அடிப்படை எதுவென்பதை உணர்ந்து அவற்றுக்கெதிராக எடுக்கப்படுகின்ற தீர்வுகளுக்கு எமது பங்களிப்பு என்னவென்பதைச் சிந்திக்க வேண்டும்.

சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி, சிறுவர் தொழிலாளர்களை இல்லாமற் செய்தல், ஆக்கபூர்வ ஒருங்கிணைந்த அபிவிருத்தி எனும் கருப்பொருளினூடாக சிறுவர்களது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்;' என்றார்

ஏறாவூர் பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி எம்.எச்.சபூஸ் பேகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவலிங்கம், பிளான் ஸ்ரீலங்கா நிறுவன திட்ட அதிகாரி வன்னிரமா, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜே.எஸ். ரட்னேஸ்வரி உட்பட இன்னும் அதிகாரிகளும் சிறுவர் கழக உறுப்பினர்களும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X