2025 மே 07, புதன்கிழமை

'புலமைப்பரிசில் பரீட்சை பெற்றோர்களின் கௌரவப்பரீட்சையாக மாறியுள்ளது'

Niroshini   / 2015 நவம்பர் 08 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பது பெற்றோர்களின் கௌரவப்பரீட்சையாக இன்று சமூகத்தில் மாறியுள்ளது என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

இன்று (08) காத்தான்குடி அல் பஜ்ர் நலன்புரி அமைப்பு நடத்திய காத்தான்குடி முதலாம் குறிச்சியில் இவ்வாண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காத்தான்குடி அல்-பஜ்ர் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்,

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களின் உள நலம் பாதிக்காத வகையில் பெற்றோர்களும் சமூகமும் நடந்து கொள்ள வேண்டும்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் அழுத்தங்களுக்குள் நின்று மாற்ற முடியாத பிள்ளைகளாக இவர்கள் மாறுகின்றனர். இதனால் சில நேரங்களில் இவர்களின் உள நலம் பாதிக்கப்படுகின்றது.

இந்தப்பரீட்சையில் 90 வீதமான மாணவர்கள் சித்தியடைவதில்லை இந்த சித்தியடையாத பிள்ளைகளின் உள நலத்தை பாதிக்காத வகையில் சமூகம் நடந்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் மாணவர்களுக்கும் சமூகத்துக்குமிடையில் இடைவெளி ஏற்படாத வண்ணம் நடந்து கொள்வதும் இங்கு அவசியமாகும்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் தமது கல்வியில் இடைவெளியை ஏற்படுத்தாமல் கல்விப் பொதுத்தராதர சாதரண தரம், மற்றும் உயர்தரம் போன்ற பரீட்சைகளில் சித்தியடைந்து சிறந்த பெறுபேறுகளை பெறக் கூடியவர்களாக மாற வேண்டும்.

ஆனால், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களில் பலர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் போன்ற பரீட்சைகளில் சித்தியடைய தவறுவதுடன் கல்வியில் இடைவெளியையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பது சிலரிடையே வியாபார போட்டியாக இன்று மாறியுள்ளதை நாம் பார்க்கின்றோம்.சில வேளைகளில், குடும்பங்களுக்குள்ளும் பிரச்சினைகள்,சர்ச்சைகள் இந்தப் பரீட்சையினால் ஏற்படுகின்றது.

உயர் பதவி வகிக்கும் குடும்பங்களின் பிள்ளைகள் மற்றும் சமூகத்தில் அந்தஸ்த்து பட்டம் பதவிகளைக் கொண்டுள்ளவர்களின் பிள்ளைகள் இந்தப்பரீட்சையில் கட்டாயம் சித்தியடைய வேண்டும்.

இல்லாவிட்டால் சமூகத்தில் ஒரு தாழ்வுச் சிக்கலான கதைகள் அடிபடுகின்றன.இவ்வாறான விளைவுகளை இந்தப்பரீட்சை சமூகத்தில் ஏற்படுத்துகின்றது.

5 ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையென்பது வறுமையில் வாழுகின்ற குடும்பங்களிலுள்ள மாணவர்கள் தமது கல்வியை இடைவிடாது தொடர்வதற்காக அரசாங்கத்தின் உதவித் தொகையினை வழங்கி அவர்களின் ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வழி முறையாகும்.

ஆனால் இன்று துரதிஷ்டம் என்னவென்றால் பணக்கார சமூகத்தினதும் பதவி பட்டம் அந்தஸ்துள்ளவர்களின் பரீட்சையாகவும் இது மாறியுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X