2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மயிலந்தனை, மாதவனைப் பகுதிகளில் காவல் நிலையங்களை அமைக்கத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலந்தனை மற்றும் மாதவனைப் பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றங்களை தடுக்கும் வகையில் அப்பகுதிகளில்; காவல் நிலையங்களை அமைப்பதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில்  திங்கட்கிழமை நடைபெற்றபோதே, இப்பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.  இக்கூட்டத்தில் மயிலந்தனை மற்றும் மாதவனைப் பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் அத்துமீறல்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும்; பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.  

மேய்ச்சல்தரைகளில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள்; அத்துமீறுவதால் அங்கு இன மோதல்கள் ஏற்படக்கூடிய சாத்தியம்; உள்ளதுடன், இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

குறித்த பகுதிகளுக்கு தான் சென்று பார்வையிட்டதுடன், அது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடனும்; கலந்துரையாடியதாகத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அத்துமீறல்களை தடுத்துநிறுத்த பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரசபையினர் பணித்ததாகக் கூறினார்.  

எனினும், இதற்கு பொலிஸாரின் ஆதரவு குறைவாகவுள்ளதெனவும்; அவர் கூறினார்.

குறித்த பகுதிகள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் வன இலாகாவுக்கும் உரியதென்பதுடன், அவர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமிழர்கள் சிறிய கம்பியை வெட்டிச்சென்றாலும் கைதுசெய்யும் பொலிஸார், இவ்வாறான பாரிய சட்டவிரோத நடவடிக்கையை தடுத்துநிறுத்த முன்வராமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

குறித்த பகுதிகளுக்கு விலை உயர்ந்த வாகனங்களில் வரும் தனவந்தர்கள் காடுகளை அழித்து காணி சுவீகரிப்பில் ஈடுபடுவதாக செங்கலடிப் பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சிறியளவில் பிடிக்கப்பட்ட காணிகள் தற்போது பாரியளபில் பிடிக்கப்படுவதுடன், அதிகாரிகளைக் கண்டதும் அவர்கள் காடுகளுக்குள் சென்றுமறைவதாகவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிகளில் காவல் நிலையங்களை அமைத்து சட்டவிரோதக்  குடியேற்றங்களைத் தடுப்பதென்பதுடன், அப்பகுதிகளிலுள்ள சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X