Suganthini Ratnam / 2017 மார்ச் 23 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'இலங்கையின் குளறுபடி அரசியல் கலாசாரத்தை மாற்றுதல்' என்ற தொனிப்பொருளில் 'மார்ச் 12' என்ற இயக்கத்தின் விழிப்புணர்வுப் பேரணி மட்டக்களப்பை நாளை வந்தடையவுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழுச் சார்பாக இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் இணைப்பாளர் ஏ.சொர்ணலிங்கம் தெரிவித்தார்.
பொலன்னறுவையிலிருந்து வரும் இப்பேரணி நாவலடிப் பிரதேசத்தில் வரவேற்கப்படுவதுடன், மட்டக்களப்பு நகரில் கூட்டமும் நடத்தப்படும். இதன் பின்னர் பெரியகல்லாறு ஊடாக இப்பேரணி அம்பாறைக்குச் செல்லவுள்ளது எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'இலங்கை அரசியலில் வேட்பாளர்களுக்கு வேட்புமனுக்களை வழங்கும்போது தகுதியற்றவர்கள், மோசடிக்காரர்கள், துர்நடத்தையில் ஈடுபடுவோர் மற்றும் ஈடுபடுத்துவோர், தரகுப் பணமும் கையூட்டும் பெறுவோர் தேர்தல்களில் களம் இறங்கும் போக்கு இச்சூழ்நிலையில் அதிகரித்துள்ளது.
எனவே, நாட்டுக்கும் எதிர்காலத்தில் ஏற்படும் பாதகமான நிலைமைகளைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல் என்ற நோக்குடன் 'மார்ச் 12' என்ற இயக்கத்தின் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நாம் எதிர்நோக்க உள்ளோம். இந்நிலையில் மக்களுக்குப் பணம் அல்லது பொருள் கொடுத்து வாக்குப் பெறுபவர்கள், கடந்த காலத்தில் இலஞ்சம், ஊழல், அரச சொத்துகளைக் கையாடல் செய்தவர்கள், குற்றம் இழைத்தவர்கள் ஆகியோரை எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்குக் கேட்பதற்காக நியமித்தால், அதனைப் பொதுமக்கள் எதிர்க்;க வேண்டும்.
சிறந்த சிந்தனையாளர்கள், மக்களுக்காகச் சேவை செய்யும் பிரநிதிகளையே தெரிவு செய்ய வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .