2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'முஸ்லிம்களின் அபிலாஷைகளை கூறவேண்டிய தேவை முஸ்லிம் தலைமைகளுக்கு உண்டு'

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் உணர்வையும் அபிலாஷைகளையும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் மற்றும்; நாடாளுமன்றத்திலும் மிகத்; தெளிவாகக் கூறவேண்டிய தேவை முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு உண்டு என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 'முஸ்லிம்களின் அபிலாஷைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று முஸ்லிம் சமூகம் கூறாமல் அமைதியாக இருந்தால்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதையும் சர்வதேச சமூகம் கூறுவதையும் ஏற்றுக்கொண்டதாகிவிடும்' என்றார்.

'முஸ்லிம்களுடைய அதிக செல்வாக்கைப் பெற்ற மிக முக்கியமான கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸாகும். மு.கா. தலைமைத்துவம் சில வேளைகளில்; தமது கலந்துரையாடலின்போது, வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் இணைந்தால் என்ன என்ற அடிப்படையிலும் கலந்துரையாடுகின்றது. இதுவரையிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரியவேண்டும் என்று மு.கா. தலைமை பேசவில்லை.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவன் என்ற வகையிலும் மு.கா.வின் ஆரம்பப் போராளி என்ற வகையிலும் மு.கா. எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை புரிந்தவன் என்ற வகையிலும் வடக்கிலிருந்து கிழக்கு பிரியவேண்டும் என்பதைப் பற்றி பேசியாக வேண்டும்' என்றார்.

முஸ்லிம் அரசியல் தலைமைகளில் எல்லோரும் பேசாமல் இருந்துவிட்டால்,  வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்களா என்று எண்ணக்கூடும். முஸ்லிம்கள் அமைதியாக இருக்கின்றார்கள். ஆகவே முஸ்லிம்களும் இதற்கு ஆதாரவானவர்களா என்று அராசங்கமும் எண்ணக்கூடும். ஆகவே, வடக்கிலிருந்து கிழக்கு பிரியவேண்டும் என்று தொடர்ச்சியாக நாம்; பேசி வருகின்றோம். நாடாளுமன்றத்திலும் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் நான் பகிரங்கமாகப் பேசி வருகின்றேன்' என்றார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து முஸ்லிம்கள் ஓரமாகியுள்ளார்கள். இதனால், ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு இருந்த கணிசமான வாக்குகள் இல்லாமல் போயுள்ளன.

எதிர்வரும் வருட முற்பகுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத்  தேர்தலின்போது, கிழக்கு மாகாணத்தில் கணிசமான ஆசனங்களை ஐ.ம.சு.கூ.  கைப்பற்றுவதற்காக் நடவடிக்கையை நாம் எடுத்துவருகின்றோம். அதற்காக ஜனாதிபதி என்னை அழைத்து கட்சியைப் பலப்படுத்துமாறு கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது முஸ்லிம்களும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X