2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'யுத்தம் முடிந்தாலும், மனித வாழ்க்கையில் அச்சுறுத்தல்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

யுத்தம் முடிந்த நிம்மதி ஒருபுறமிருந்தாலும், அதனை முழுமையாக அனுபவிக்க முடியாதவாறு மனித வாழ்க்கை தற்போது அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விவசாயிகளுக்கு   விழிப்புணர்வூட்டும் நிகழ்வின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தற்போதைய  பரபரப்பான உலகில் பொருளாதாரம், கலாசாரம், சூழல், பொழுதுபோக்கு அம்சங்கள், இயற்கை வனப்பு என்று ஒட்டுமொத்த வாழ்க்கைச் சூழலும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றது. இந்த நெருக்கடி மிக்க சூழலை மாற்றியமைப்பதாக இருந்தால், முதலில் எமக்குள் ஆக்கபூர்வமான மன மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

இந்த உலகத்தில் நல்ல சூழலை அமைத்து நாங்களும் வாழ்ந்து எதிர்கால சந்ததிக்கும் இந்த உலகத்தை நல்ல முறையில் ஒப்படைக்க வேண்டும். மனித நடத்தைகளால் இந்த உலகம் குப்பை மேடாக மாறிக்கொண்டிருக்கின்றது.
அவசர உலக வாழ்க்கைக்குள் அகப்பட்டுள்ள நாம், இந்த உலகின் இயற்கைத் தன்மையை மாற்றி அழித்துக்கொண்டிருக்கின்றோம். இது மிக ஆபத்தானது. இந்தப் பேரழிவு எம்மை மிக நெருங்கி வந்துள்ளபோதும், நாம் அதனை உணராதவர்களாக உள்ளோம். ஏனெனில், எமக்குப் பின்னர் எமது சந்ததி வாழ இந்த உலகம் இருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இன்னும் கொஞ்சக் காலத்தில் இயற்கை வளங்கள் தீர்ந்து விடும். எரிபொருட்கள் நின்று போனால் ஆடம்பர வாகனங்களை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அடுத்து வரும் 150 ஆண்டுகளுக்குள் இந்த இயற்கை வளங்கள் அழியும் நிலைமை தோன்றும் என்று ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றார்கள். அப்பொழுது நாம் உயிருடன் இருக்க மாட்டோம் என்றாலும், எமது சந்ததியின் நிலைமை என்ன என்பதை நாம் இப்பொழுதே சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

இயற்கையை அழித்து அற்ப இன்பம் காண நாம் இப்பொழுது நினைத்தால், நாம் வாழும் பூமி அழிந்து விடும். இரசாயனங்களால் நாம் வாழும் பூமி, நீர், காற்று, வான் மண்டலம், மண் என்பன நஞ்சூட்டப்பட்டிருக்கின்றது.
தினமும் இரசாயனங்களின் உதவி கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, தானியங்கள், இறைச்சி வகைகளை உண்பதால் உடலாரோக்கியமும் உலக சுற்றுச் சூழலும் கெட்டு வருகின்றது. இதனை இப்பொழுதே நிறுத்தியாக வேண்டும். இதற்கு விவசாயிகள் உதவ வேண்டும். பசுமைச் சுற்றாடலைப் பற்றிய கவனம் இப்பொழுது எல்லா மட்டங்களிலும் பேசுபொருளாக எடுபட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X