2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'வரலாற்றில் ஓர் ஏடு நிகழ்ச்சி தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் பதிந்து விட்டது'

Niroshini   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

முஸ்லிம் நேயர்களை மட்டுமல்ல தமிழ் மக்களையும் வானொலியை விட்டு நகர விடாமல் ஒட்டு மொத்தமான வானொலி நிகழ்ச்சிக்கே சிகரம் வைத்தாற்போல அமைந்திருந்தது அந்த நாட்களில் ஒலிபரப்பான ஏ.சி.ஏ.எம். புஹாரியின் குரல்வழி வந்த வரலாற்றில் ஓர் ஏடு என்றால் அது மிகையாகாது என கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் ரூபி வலன்ரீனா பிரான்ஸிஸ் தெரிவித்தார்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை வரலாற்றில் ஓர் ஏடு புகழ் மௌலவி, கலாபூஷணம் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் தழிழ்-இஸ்லாம் பாட முன்னாள் நூலாக்கக் குழு உறுப்பினருமான ஏ.சி.ஏ.எம். புஹாரியின் 'வரலாற்றில் ஓர் ஏடு' நூல் வெளியீடு சனிக்கிழமை (13) மாலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றியபோது,

1972 ஜுலை 2 ஆம் நாள் இரவு 8.55 இற்கு ஒலிபரப்பாகத் தொடங்கிய 'வரலாற்றில் ஓர் ஏடு' நிகழ்ச்சி முஸ்லிம் மக்களை மட்டுமல்ல தமிழ் நெஞ்சங்களையும் கட்டிப் போட்டது.

அவரது குரல் வசீகரமும் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டிய மனித குலம் அனைவருக்கும் பயன்படத்தக்க வகையில் அமைந்த வரலாற்றுக் குறிப்புகளும் இன்றளவும் எல்லோர் நெஞ்சிலும் நீங்காத இடம்பிடித்துள்ளன.

அவரால் தொகுத்து வழங்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் வாழத் தேவையான பல்வேறு பண்புகளைப் பற்றி நமக்குப் போதிக்கின்றன.

மொழி வளம் சிதையாமல், கலப்பற்ற தமிழில் தெளிவான உச்சரிப்புடன், குரழ்வழியாக காட்சிப் படிமங்களைக் கண்ணெதிரே கொண்டு வந்த பெருமை வரலாற்றிலோர் ஏடு புகழ் புஹாரியைச் சாரும்.

வானொலியில் சலிக்காமல், சன்மானம் ஏதுமின்றி சன்மார்க்கப் பணி செய்த மௌலவி புஹாரிக்கான நின்று நிலைக்கும் சன்மானத்தை  இறைவன் அவருக்கு இப்பொழுது வழங்கி இருக்கின்றான். அதுதான் இயன்றளவும் அவரை தமிழ் பேசும் வானொலி நேயர்கள் நினைவில் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் பாராட்டையும் புகழையும் ஒருபோதும் பணத்தினால் பெற்றுவிடவோ அதனைத் தக்க வைத்துக் கொள்ளவோ முடியாது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X