2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இரண்டு மாதங்களுக்குள் தீர்வு'

Niroshini   / 2017 மார்ச் 31 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இரண்டு மாதங்களுக்குள் தீர்வு வரும் என, நேற்று மாலை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டள்ளவர்களிடம், அரசாங்கத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அரச துறைகளில் வேலை வழங்கக் கோரி காந்திப் பூங்காவின் அருகே மேற்கொள்ளப்பட்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் 38ஆவது நாளாக இடம்பெற்று வரும் நிலையிலேயே, அரச தரப்பினால் இரு மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த அவசரப் பிரேரணையின் பின்பு குறித்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அனுப்பியுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவினர் வேலையற்ற பட்டதாரிகளிடம் பேச்சுவர்த்தை நடாத்திவிட்டு குறித்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.

இக்குழுவில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆர்சு மாரசிங்க தலைமையில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ. ஸ்ரீ நேசன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஆர்சு மாரசிங்க பட்டதாரிகளிடம் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கத்தின் திட்டமிடப்படாத கல்வித் திட்டத்தினால் குறித்த பட்டதாரிகள் வீதியின் அருகில் இரவு,  பகலாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்கொண்டுவரும் போராட்டத்துக்கு இதுவரையும் எந்தவிதமான சாதகமான பதிலும் இல்லாமல் இருப்பது கவலையளிக்கின்றது. இதனை உணர்ந்து பிரதமர் குறித்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் க.பொ.த. உயர் தரம் கற்றுச் செல்லும் மாணவர்கள் தமது துறைசார்ந்த தொழிற் கல்வியை பெற்றுச் செல்வார்கள் அப்போது இவ்வாறான வேலையில்லாப் பிரச்சினை தோன்றாது எனத் தெரிவித்தார். 

குறித்த குழுவினரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பில் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி. கிசாந்திடம் கேட்டபோது தமது கோரிக்கைகளுக்கு எழுத்து மூலமான தீர்வு வழகும்போதே தமது தொடர்ச்சியான போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றித் தீர்மானிக்கப்படும். இதுவரையும் அரசியல்வாதிகளால் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில் எதுவும் இடம்பெறவில்லை. தொடர்ந்து இரு மாதம் வரையிலும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும் இரு மாதங்களின் பின்பு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லையாயின், தொடர்ச்சியான போராட்டம் இடம்பெறும் எனக் கவலையுடன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .