2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'விழிப்புணர்வு இல்லாததாலேயே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை தரவில்லை'

Niroshini   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள் மத்தியில் மூலதன சந்தை மற்றும் பங்குச்சந்தை தொடர்பில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டக்களப்புக்கு வருகை தரவில்லை என மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.

உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை பயிலும் மாணவர்களுக்கான மூலதன சந்தை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று புதன்கிழமை நிறுவனத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தன ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களான தனிஷ்க திலகரட்ன,இம்ரான் அகமட் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

மூலதன சந்தை தொடர்பில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டத்துக்கு அமைவாக முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் இந்த கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

மூலதன சந்தை தொடர்பில் பல்கலைக்கழகம் மற்றும் இவ்வாறான தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்கள் மூலமாக பொதுமக்கள் மத்தியில் இதனைக்கொண்டுசெல்லும் வகையிலேயே இவ்வாறான கருத்தரங்குகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தன ஆணைக்குழுவின் உத்தியோகத்தர் இம்ரான் அகமட் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இணைப்பாளர் ஜெயபாலன்,

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்து பாரிய முதலீடுகளை மேற்கொள்ளவேண்டுமாக இருந்தால் பங்குச்சந்தை மற்றும் மூலதன சந்தையின் நடவடிக்கைகள் ஊடாக எவ்வாறு நிதியை பெற்றுக்கொள்வது கம்பனிகளின் மூலதன ஈட்டத்தை எவ்வாறு மேற்கொள்வது போன்ற அறிவுகளை ஏற்படுத்தவேண்டும்.அதற்கான களத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.அதற்கான கருத்தரங்காகவே இதனை ஏற்பாடுசெய்துள்ளோம்.

இதன் மூலம் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.அதற்கான பாரிய பொறுப்பு மாணவர்களாகிய உங்கள் கைகளில் உள்ளது.

மாணவர்கள் மத்தியில் இவ்வாறான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மாற்றத்தினை ஏற்படுத்தும் என நான் கருதுகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் தொழில்துறையினை கட்டியெழுப்புவதற்கும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கும் வழியேற்படுத்தும் என்ற அடிப்படையிலேயே இவ்வாறான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மாணவர்கள் மத்தியில் கொண்டுவரப்படுகின்றன என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X