2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'வாழ்வாதாரத் திட்டங்களுக்காக பணியாற்றுகிறோம்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பொருளாதார மற்றும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களுக்காக மட்டக்களப்பு உட்பட வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏழு மாவட்டங்களை உள்ளடக்கியதான அபிவிருத்தித் திட்டங்களுக்காக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையம் பணியாற்றி வருவதாக அதன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.ஸிறாஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பெண்கள் தலைமை தாங்கும் 28 வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

நீடித்து நிலைத்து நிற்கும் வாழ்வாதார உதவிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தையல் இயந்திரம், மா அரைக்கும் இயந்திரம், உடு துணி வியாபாரத்திற்கான பொருட்கள்,  சிறு கடைக்கான பொருட்கள், உணவுப் பொருட்கள் தயாரித்தல், மட்பாண்ட உற்பத்திக்கான மூலப்பொருட்கள் என்பன வழங்கப்பட்டன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.ஸிறாஸ், 'வறிய குடும்பங்களை குறிப்பாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை முஸ்லிம் எய்ட் தனது உதவித் திட்டத்திற்காக தெரிவு செய்வதன் நோக்கம் இந்தக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து பிறரிடம் தங்கி வாழாமல் சொந்தக் காலில் நின்று சுயமாக இயங்க வேண்டும் என்பதுதான்.

அத்துடன், வறிய குடும்பங்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும் என்பதற்காக முஸ்லிம் எய்ட் நிறுவனம் அதன் அபிவிருத்தித்திட்ட வீச்சு எல்லையை விரிவுபடுத்தியிருக்கின்றது. அதில் எதிர்காலத்தில் இன்னும் பல குடும்பங்கள் உள்வாங்கப்படலாம். அதற்கு தற்போது உதவி பெறும் பயனாளிகள் தமது பூரண ஆதரவைச் செலுத்துவதோடு சுயமாக வேகமாக முன்னேறிக் காட்டவும் வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரப் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம், முஸ்லிம் எய்ட் நிறுவன மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.ஸிறாஸ் அதன் வாழ்வாதாரத்திட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஏ.ஜி.எம். பஹீ மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X