2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாகரையில் தூர்ந்துபோன குளம் 40 வருடங்களுக்குப் பின் புனரமைப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு, வாகரை – மதுரங்கேணி, எல்வத்துமடு குளத்தைப் புனரமைக்கும் வேலைகள் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தலைமையில்   வியாழக்கிழமை (11.09.2014) ஆரம்பமாகின.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தூர்ந்துபோன குளங்களைப் புனரமைத்து உள்ளுர் விவசாயத்தையும் மீன்பிடியையும் அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, 40 வருடங்களுக்குப் முன்னர் தூர்ந்துபோன நிலையிலிருந்த இக்குளம் புனரமைக்கப்படவுள்ளது.

கிராம மக்களின் முழுமனித வளத்தையும் பயன்படுத்தி 'வேலைக்கான கொடுப்பனவு' என்ற திட்டத்தின் அடிப்படையில் எல்வத்துமடு குளம் புனரமைப்பு வேலைகளுக்காக 48 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ராகுலநாயகி தெரிவித்தார்.

சுமார் ஒன்றரைக் (1.5 கி.மீ) கிலோமீற்றர் நீளமும் 25 அடி உயரமுமான குளக்கட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.  எல்வத்துமடு குளம் புனரமைப்புச் செய்யப்படுவதனால் சுமார் 325 ஏக்கர் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ள நீர்ப்பாசன வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணம் படையினரால் விடுவிக்கப்பட்டதும் 2007 ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகள் அந்தப் பகுதிக்குச் சென்று நெற்செய்கையில் ஈடுபட படையினர் அனுமதியளித்திருந்தனர்.

எனினும், வான் மழையை மாத்திரம் நம்பி விவசாயிகள் மானாவாரி நெற் செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.

குளம் புனரமைப்புச் செய்யப்பட்டதும் இப்பகுதியைச் சூழவுள்ள விவசாயிகள் பெரும்போகம், நீர்ப்பாசனப் போகம் உட்பட சுமார் 750 ஏக்கர் நெற்செய்கையில் ஈடுபட முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

எல்வத்துமடு குளம் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி,
'வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிவாரணத் திட்டத்தின் கீழ் எல்வத்துமடுக் குளம் மக்களின் பங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

நாளொன்றுக்கு 500 ரூபாய் கொடுப்பனவுடன் கிராம மக்கள் தங்களது சுற்றாடலிலுள்ள தூர்ந்து போன இந்தக் குளத்தைப் புனரமைப்புச் செயவதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

நீண்டகால நோக்கில் இந்தப் பிரதேசத்தின் இயற்கைச் சூழலையும் பாதுகாத்துக் கொண்டு தங்களது வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தை நீடித்து நிலைக்கும் வருமானம் ஈட்டும் தொழிலாக ஆக்கிக் கொள்வதற்கும் இந்தக் குளம் புனரமைப்பு உதவும். அத்துடன் கோடை காலங்களில் ஏற்படும் வறட்சிக்கு ஈடுகொடுத்து தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்கும் இது உதவும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X