2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்கில் ஆணைக்குழு விசாரணை; 54பேருக்கு அழைப்பு

Menaka Mookandi   / 2014 மார்ச் 20 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது அமர்வு, ஏறாவூர்ப்பற்றிலுள்ள, செங்கலடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (20) ஆரம்பமானது. இந்த ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதற்காக 54 உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில், சுரஞ்சனா வித்தியாரத்ன, மனோ ராமநாதன் ஆகியோரை உள்ளடக்கிய விசாரணைக் குழுவினரும் சட்ட அலுவலர்களான துசித் முதலிகே, சமிந்த அத்துக்கோரள ஆகியோருட்பட குழுவின் ஏனைய அலுவலர்களான இஷார குணசேகர, ஜி.ஜே.பியூமாலி, நளாயினி ஜயராம், ஜயனி சந்தருவனி, பி.குமாரி உள்ளிட்டவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

மாவட்டச் செயலாளர் சரோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் ரீ.கிரிதரன், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர், சட்ட உதவி ஆணைக்குழு அலுவலர் ஈ.அருள்விழி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரும் பிரசன்னமாகி இருக்க விசாரணைகள் ஆரம்பமாகின.

முதலாவது விசாரணையாக இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த செங்கலடியைச் சேர்ந்த சிவராசா மரியதாஸ் என்பவரின் மனைவி கலைச்செல்வி, சுமார்  20 நிமிடங்கள் வரை தனது வாக்குமூலத்தை அளித்தார்.

யுத்தம் முடிந்த பின்னர் 2009 ஆண்டு காணாமல் போன தனது கணவரை ஜனாதிபதி ஆணைக்குழு எப்படியாவது கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று அவர் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கோறளைப்பற்று தெற்கு கிரான், மற்றும் வாகரை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுக்கான விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை, கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X