2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இவ்வருடத்தில் மாத்திரம் 2 கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத வலைகள் அழிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


2012ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார்  2 கோடி ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட வலைகளைக் கைப்பற்றி நீதிமன்ற உத்தரவின்பேரில்  அழித்துள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் வாவி மீனவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் நேற்று புதன்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

'காத்தான்குடியில் சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான முக்கூட்டு வலை பிடிபட்டது. பாலமீன்மடு முகத்துவாரத்தில் இதுவரையில் 12 தோணிகளைக் கைப்பற்றியுள்ளோம்.

கடந்த வருடம் மண்டூர் பிரதேசத்திலே கைப்பற்றப்பட்ட 18 இழுவை வலைகளை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவற்றை அழித்துள்ளோம்.

ஏறாவூரை அண்டிய மட்டக்களப்பு வாவியில் கடந்த இரு நாட்களில் சுமார் 18 இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளும் தோணிகளும் சுற்றிவளைப்பின்போது பிடிபட்டன.

யார் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு நாம் கடுமையாகப் பாடுபடுவோம். இதில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற இனச்சாயம் பூசிப்பார்த்து பிரச்சினையை வேறு திசையில் திருப்ப ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

தமிழ், முஸ்லிம் இளைஞர்களை ஒன்றிணைத்து நவீன கடற்றொழில் பயிற்சிகளைப் பெற்று கடற்றொழில் மூலம் அபிவிருத்தி காணமுடியும். மீனவர்களின் அபிவிருத்திக்காக நிதிகள் எதிர்வரும் ஆண்டில் கிடைக்கவிருக்கின்றன. பெரிய ஆழ்கடல் படகும்  இதில் உள்ளடங்கும். நவீன சந்தை பூங்கா என்பனவும் இப்பிரதேச கரையோர சமுதாய மக்களின் அபிவிருத்திக்காக முன்வைக்கப்பட்ட திட்டமாகும். இது இந்தப் பிரதேசத்தின் தற்போதைய நகரபிதாவும் முன்னாள் நாடாளுன்ற உறுப்பினருமாகிய அலிஸாஹிர் மௌலானாவின் நீண்டகாலக் கோரிக்கையாகவும் இருந்தது.

தென்னிலங்கையர்கள் இங்கு வந்து எங்களது வளங்களை எடுத்து விடுவார்கள் என்று கூறுவதற்கு முதல், நாங்களே எங்களது வளங்களை அழித்துவிடாமல் பாதுகாத்தால்தான் அதன் மூலம் பயன் பெறலாம்.

ஆகவே நாங்கள் சிங்கள மக்களோடு வைத்திருக்கும் உறவை வளர்த்துக் கொண்டு ஆழ்கடல் மீன்பிடி சம்பந்தமாக அவர்களது தொழில்நுட்ப அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்;.

மீனவர்களிடம் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற எந்தவித வேறுபாடுகளோ சாதி மதமோ இல்லை. மீன்வளம், கடல் வளம் என்பவை இறைவன் தந்த சொத்து.' என்றார.

இந்நிகழ்வில் மாவட்ட கடற்றொழில் உத்தியோகஸ்தர்களான ஏ.ஏ.பரீட், ஜே.ஏ.ராஜ்குமார், ரீ.பாலமுகுந்தன், மாவட்ட கடற்றொழில் மீனவ சம்மேளனத் தலைவர் சிறில் அன்ரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X