2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கில் தமிழ் மக்கள் 34 வீதமாக குறைவடைந்துள்ளனர்: அருண்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார் 

'கடந்த, 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் பிரகடனப்படுத்தப்பட்டபோது கிழக்கு மாகாணத்தில் 50 வீதமாக வாழ்ந்த தமிழ் மக்களின் நிலை 1987ஆம் ஆண்டு 44 வீதமாகவும் தற்போது 34 வீதமாகவும் குறைவடைந்துள்ளது' என மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

'இதற்கு பிரதான காரணம் கடந்தகால யுத்தமும் தமிழர்களின் நாடுகடந்த வெளியேற்றமும்தான்' என்றும் அவர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, விபுலாநந்த சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) மாலை இடம்பெற்ற விவசாயப் பிரதிநிதிகளினுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'தேசிய அரசியலை பிறநாட்டு அரசியல்போன்று பார்க்கும் தமிழர்களின் அரசியல் பலவீனத்தாலேயே பல பிரதேசங்களை இன்று நாம் இழந்துள்ளோம். தமிழ் மக்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், அரசியல் தீர்வுபற்றி எவ்வாறு சிந்திக்க முடியும்?  

ஆலையடிவேம்பிலும் பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அக்கரைப்பற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இதற்கு காரணம் யார்? தமிழ்மக்களின் பலவீனமான அரசியல் என்பதே யதார்த்தமான உண்மை. இவ்வாறான நிலை மட்டக்களப்பிலும் இடம்பெறலாம். 

கடந்த காலங்களில் அம்பாறை மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதிகளாவது சிறந்த சேவையை இங்கு வழங்கி இருந்தால் ஏனைய அரசியல்வாதிகள் இங்கு வரவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

வட்டைமடு மேய்ச்சல் தரை பிரச்சினை, கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் உள்ளிட்டவை தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் இன்று வரை இவ்விடயங்களில் மௌனியாகவே செயற்படுகின்றனர்.

இருந்த போதும் இவ்விரு விடயங்களையும் ஜனாதிபதியிடம் நான் பேசியபோது அடுத்த மாதத்தினுள் தீர்த்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு அரசாங்கம் அதிக சலுகைகளை வழங்குவதாக சிலர் கூறுகின்றனர். அது உண்மை. ஏனெனில் அவர்கள் அரசாங்கத்துடன் உள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் பக்கம் சாய்ந்து தங்களது சமூகத்துக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்கின்றனர். நாம் அவ்வாறல்லாமல் யார் ஆட்சி செய்தாலும் எதிர்கட்சி எனும் கொள்கையில் மாறாதவர்களாக உள்ளோம்.

எனவே, நம்மை நாம் அரசியலில் பலப்படுத்திக்கொள்வதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை அடுத்த சந்ததிக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X