2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

' 60,000 சிங்கள மக்களும் 40,000 எல்.ரீ.ரீ.யினரும் யுத்தத்தில் உயிரிழந்துள்ளனர்'

Thipaan   / 2014 நவம்பர் 16 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -வடிவேல் சக்திவேல் 

 
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் 60,000 சிங்கள மக்கள் இறந்துள்ளார்கள் இதில் எந்த விதமான இயக்கங்களுடனும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள்தான் இறந்தார்கள். ஆனால், 40,000 ஆயிரம் பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து இறந்துள்ளார்கள். இதுதான் உண்மை இதனை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.  தற்போது வரைக்கும் யுத்தம் நடைபெற்றிருந்தால் இலட்சக்கணக்கான மக்கள் மேலும் அழிந்திருப்பார்கள்  என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட சாதனையாளர் பாராட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மட்/களுதாவளை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இருக்கின்ற 9 மாகாணங்களிலும்  9ஆவது இடத்தில்தான் கிழக்கு மாகாணம் இருந்து வந்தது.

ஆனால், தற்போது கிழக்கு மாகாணம் முன்னேறிக் கொண்டு வருகின்றது. கடந்த 2013ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணம் 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. அதில் முதலிடத்தை வடமாகாணம் பெற்றுக் கொண்டுள்ளது.

வட மாகாணத்தில் தொடர்து 26 வருட காலமாக யுத்தம் நிலவியிருந்தது, அங்கிருந்த மாணவர்களின் கையில் பேனாவுக்குப் பதிலாக துவக்குத்தான் இருந்தது.

கையிலே பந்துகளுக்குப் பதிலாக குண்டுகள்தான் இருந்தன, கழுத்திலே மாலைக்குப் பதிலாக சைனைட் குப்பிகள்தான் இருந்தன. இவ்வாறு இருந்து வந்துள்ள நிலையிலும் கூட, கடந்த 2013 ஆம் ஆண்டு  கல்வி பொதுத் தரா தர உயர்தரப் பரீட்சையில் வட மாகாணம் தான்  முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. எவ்வாறு பார்தாலும் தமிழ் மாணவர்கள்தான் கல்வியில் முதலிடத்தில் இருக்கின்றார்கள்.

இதுபோன்றுதான் கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மாணவர்கள்தான் அதிக பெறுபேற்றை எடுத்துள்ளனர். சிங்கள மாணவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் முதலிடம் பெறவில்லை.

கடந்த காலங்களில் எமது பிரதேசத்தில் யாரும் கதைக்க முடியாத சூழல் காணப்பட்டது. மதத் தலைவர்களும் வாய் விட்டுக் கதைக்க முடியாமலிருந்தார்கள். மாறாக ஆயுங்கள்தான் கதைத்தன.

தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழல் காரணமாக பாரிய அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன.

என்னைப் பொறுத்த வரையில் நான் பௌத்த சமயத்தைச் சார்ந்தவன ஆனாலும் தமிழ், முஸ்லிம், சிங்களம், என்ற பேதமின்றி நான் செயற்பட்டு வருகின்றேன். நான் ஒரு பௌத்தனாக இருந்து கொண்டாலும் மாமிச உணவுகள் எதையும் உட்கொள்வதில்லை மரக்கறி வகையினைத்தான் உண்டு வருகின்றேன். அதற்காக நான் பொதுபலசேனா இல்லை என்றார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X