2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் நாளொன்றுக்கு 80,000 போத்தல் மதுபானம் விற்பனை

Kogilavani   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

'மட்டக்களப்பு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் போத்தல் மதுபானம் விற்பனையாகிறது. இதனால் குடும்ப சந்தோசம் பாதிக்கப்படுவதுடன் அபிவிருத்திக்குப் பயன்பெற வேண்டிய பெருந்தொகையான பணம் வீணாகப் போகிறது' என மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்தின தெரிவித்தார்.

வவுணதீவுப் பொலிஸ் பிரிவின் சிவில் பாதுகாப்பு செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் வவுணதீவுப் பரமேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

வவுணதீவுப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.ஐ.உவைஸின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆஜந்த சமரக்கோன் தலைமையில் இடம்பெற்ற  இக்கூட்டத்தில் வவுணதீவுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 16 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த கிராமிய சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றி அவர்,

'மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கொலை, கொள்ளை என குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவற்றைத் தடுக்கும் பணியில் சிவில் பாதுகாப்புக் குழக்களின் பங்களிப்பு பாரியதாக உள்ளது. மதுபாவனை அதிகரிப்பும் குற்றச் செயல் அதிகரிக்கக் காரணமாக உள்ளதுடன் மதுபோதைப் பாவனையால் குடும்ப மகிழ்ச்சி என்பது சீரளிக்கப்படுவதுடன் பிள்ளைகளின் கல்வியும் இதனால் சீரழிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் போத்தல் மதுபானம்; விற்பனையாகின்றது. சட்டவிரோத மதுபான விற்பனை நிலையங்களினாலும் கிராமங்களில் பிரச்சினை ஏற்படுகின்றது. இவற்றை  தடுக்க சிவில் பாதுகாப்புக் குழுக்கள் பொலிஸாருடன் இணைந்து செயற்படவேண்டும்.

டெங்கு நோய் பரவுவதை தடுப்பதிலும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் பொலிஸாருடன் இணைந்து செயற்பட வேண்டும். சென்ற வருடம்  60 பேர் மட்டக்களப்பில்  டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.

எதிர்வரும் காலம் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டும்.
இதேபோன்றுதான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துச் செல்கின்றன. 2008 முதல் 2012 பத்தாம் மாதம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 பெண்கள் வன்முரைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுணதீவுப் பொலிஸ் பிரிவில் 5 பெண்கள் வன்முறைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

வீதி விபத்துதுக்களும்  ஏனைய பிரதேசங்களை விட மட்டக்களப்பில் அதிகரித்துச் செல்கின்றது. கடந்த வருடம் 665 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவ்விபத்துக்களினால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாரிய காயங்கள் ஏற்பட்ட விபத்துக்களாக 154, சிறு காயங்கள் ஏற்பட்ட விபத்துக்களாக 346, நட்டம் ஏற்பட்ட விபத்துக்களாக 104 பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வருடம் மோட்டார் போக்குவரத்து வழக்குகள் 899 பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸாருடன் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் இணைந்து சிறப்பாகச் செயற்பட வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .