Kogilavani / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
கிழக்கு மாகாண சபை நாடு நகர சட்டமூலத்தை ஆதரிப்பார்களானால் தென்பகுதியில் இருக்கின்றவர்கள் அதை இலாபகரமாக பயன்படுத்தவதோடு எமது மண்ணை தென்பகுதிக்கு தாரைவார்த்துக் கொடுக்கின்ற நிலையேற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் வித்தியால விளையாட்டுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமது நாட்டில் யுத்தம் முடிவுற்று சமாதானம் நிலவுவதாக அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் வடகிழக்கிலே மிக மோசமான ஒழுக்க சீர்கேடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அது யாழ்ப்பாணமாக இருக்கலாம் மட்டக்களப்பாக இருக்கலாம். பெற்றோர் கவனிப்பு குறைவாக இருக்கின்ற மாணவ மாணவிகள் தீயவழியில் செல்லக்கூடிய நிலைமை காணக்கூடியதாக இருக்கின்றது.
வேறு மாவட்டத்திலிருந்து இங்கு வந்து சில தீயசக்திகள் எமது மாணவர்களின் கலாசாரத்தை சீரழிப்பதற்காக பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். எமது மாணவர்கள் ஒழுக்கமுள்ள அறிவு சார்ந்தவர்களாக வரக்கூடாது மோசமானவர்களாக வரவேண்டும் என சில தீயசக்திகள் திட்டமிட்டு செயற்படுகின்றன.
எமது பகுதியில் நில அபகரிப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நிலங்களை மாற்றி கலாசாரத்தை மாற்றி ஆலயங்களுக்குப் பதில் பான்சாலைகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கிழக்கு மாகாண சபையில் நாடு நகர சட்டமூலம் இடம்பெற்றிருக்கிறது. கிழக்கு மாகாண சபை அந்த திட்டத்தை ஆதரிப்பவர்களாக இருந்தால் அது அவர்கள் தமிழ் மக்களுக்க செய்யும் துரோகமாகும்.
அந்த சட்டமூலத்திற்கமைய புத்த சாசன அமைச்சுக்கு காணிகளை நேரடியாக பெறும் வாய்ப்பிருக்கின்றது. அந்நிலை வருமாக இருந்தால் எமது வடக்கு கிழக்கிலிருக்கின்ற மலை சார்ந்த இடங்களில் தமிழ் மன்னர்கள் வாழ்ந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கின்ற ஒரு சதித் திட்டம் நிச்சயமாக இடம்பெறும்.
இவ்வாறானதொரு சதித்திட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை துணைபோகும் என்று நான் நினைக்கவில்லை. இந்த மாகாணசபை அமைக்கப்பட்டது கூட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலாகும்.
வடகிழக்கிலே 62 வருடங்களாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற போராட்டத்தின் ஒரு வெளிப்பாடாகத்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி வடகிழக்கிலே இருக்கின்ற மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கி அவர்கள் தன்னிச்சையாக அதிகாரம் செய்யப்படவேண்டும் என்ற சட்டத்தின் அமைவாகவே மாகாணசபை கொண்டுவரப்பட்டது.
அதன் ஒரு கட்டமாகத்தான் வடகிழக்கு இரண்டாக பிரிக்கப்பட்டாலும் கூட நியாயபூர்வமாக வடகிழக்கை இணைப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டிருக்கின்றது.
எமது தாயகத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபை நாடு நகர சட்டமூலத்தை ஆதரிப்பார்களானால் தென்பகுதியில் இருக்கின்றவர்கள் அதை இலாபகரமாக பயன்படுத்தவதோடு எமது மண்ணை தென்பகுதிக்கு தாரைவார்த்துக் கொடுக்கின்ற நிலையேற்படும். அந்தத் துரோகத்தை அவர்கள் செய்யக்கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பகிரங்க வேண்டுகோளாகும்.
கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முஸ்லிம் சகோதர உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்த சக்தியாக தமிழ் பேசும் மக்களின் இனத்தை காப்பதற்கு தயாராக வேண்டும்.
கடந்த வாரம் தாந்தாமலையிலிருந்து மூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற கச்சக்கொடி சுவாமி மலைப் பகுதியிலும் இவ்வாறானதொரு சதித்திட்டம் இடம்பெற்றது. நான் நேரடியாகச் சென்று அம்முயற்சியை தடுப்பதற்கான சில சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றேன். ஒரு மாகாணத்திற்கு இருக்கின்ற அதிகாரத்திற்கமைய நிச்சயமாக அதை தடுப்பதற்கான வாய்ப்பிருக்கின்றது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago