2026 மே 07, வியாழக்கிழமை

உடைக்கப்பட்டது பேடன் பவலின் சிலை அல்ல: சாரணர் இயக்கம்

Super User   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து சேதமாக்கப்பட்டது சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவலின் உருவச்சிலை அல்ல என சாரணர் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் நிருவாக பிரிவுக்கான உதவி மாவட்ட ஆணையாளர் ஏ.குணரெட்னம் தெரிவித்தார்.

மாவட்ட ஆணையாளர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மட்டக்களப்பு நகரில் சாரணர் தந்தை பேடன் பவலின் உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் எமக்கு கவலையளிப்பதாக உள்ளது. இந்த சிலை பேடன் பவலின் உருவச்சிலை அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

குறித்த சிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 80ஆவது ஆண்டு நிறைவை அடையாளப்படுத்தி மட்டக்களப்பு நகரில் சீருடை அணிந்த சாரண மாணவரின் உருவச் சிலையாகும்.

குறித்த சாரணர் மாணவரின் உருவச்சிலை 1990ஆம் ஆண்டு அப்போது மாவட்ட சாரணர் இயக்கத்தின் தலைவராக பதவி வகித்த ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஏ.கே.பத்மநாதனினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

எனினும் மட்டக்களப்பு நகரில் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளில் சாரணர் இய்க்கத்தின் தந்தை பேடன் பவலின் உருவச் சிலையும் சேதமாக்கப்பட்டதாக கூறப்பட்டது.இந்நிலையில் இச்செய்திகளிலும் தகவல்களிலும் பேர்டன் பவலின் பெயர் குறிப்பிடப்பட்டமை எமக்கு கவலையளிக்கின்றது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லாரி மற்றும் மெதடிஸ்த்த கல்லூரி சாரணர் மாணவர்களினால் குறித்த சிலை நிறுவப்பட்டது.

இச்சிலை உடைப்பு சம்பவம் இடம்பெற்ற போது இலங்கையில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு நிகழ்வும் 29ஆவது ஆசிய பசுபிக் ஜம்போரியும் தம்புள்ள நகரில் நடைபெற்றக்கொண்டிருந்தது.

இந்நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, சாரணர் இயக்க அடையாளச் சின்னம் சேதப்படுத்தப்பட்டமை சர்வதேச ரீதியிலும் சாரணர்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .