2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாநகர சபையின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன: என்.கே.றம்ழான்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாநகர சபையின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட கூட்டத்தில் இன்று புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாநகர சபை உறுப்பினர் றம்ழான் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்துரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் றம்ழான்...

மட்டக்களப்பு மாநகர சபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் என்ற வகையில் சபையின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன் ஆதரிப்பது என முடிவு செய்தேன்.

மட்டக்களப்பு மாநகர சபையின் உரிமைகள் எதிர்க்கட்சி சபையின் உரிமைகள் பறிக்கப்படுவது போன்று திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்சி நிரலின் அடிப்படையில் அரசாங்கத்தினாலும் அதன் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர்களினாலும் பறிக்கப்பட்டு வருகின்றது, அதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.

கடந்த 1975ஆம் ஆண்டின் ஆளணி வெற்றிடமே இன்று இச்சபையில் நடைமுறையிலுள்ளது. சனத்தொகையின் அதிகரிப்புக்கேற்ப ஆளணி வெற்றிடத்தினை வழங்குமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இன்றுவரையும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மாறாக நடைமுறையில் இருந்து வந்த ஆளணி வெற்றிடத்தில் சுமார் ஐம்பது வெற்றிடங்கள் கிழக்கு மாகாண சபையின் ஆளுநரினாலும் அரசாங்கத்தினாலும் இல்லாதாக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி சபைக்கு வரி செலுத்தும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் வரிப்பணத்திலிருந்து வேதனம் வழங்கும் வகையில் சில ஆளணியினை நியமிப்பதற்கும் ஆளுநரினால் விசேடமாக கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இச்சபை ஆளும் கட்சியாக இருந்த போதிலும் விசேட நிதியாக ஒரு ரூபாயேனும் அரசாங்கத்தினால் இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதேபோன்று முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனால் மாநகர சபையின் வாடி வீடும், மாநகர சபைக் கட்டிடமும் திருத்தியமைக்கப்பட்டு புதிதாக வாசிகசாலை கட்டிடமும், பஸ் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு எந்த ஆளும் தரப்பு அமைச்சரினாலோ மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களினாலோ அல்லது மாகாண அமைச்சரினாலோ ஒரு ரூபாயேனும் மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக இல்லை.

அதுமாத்திரமின்றி முழுக்க முழுக்க மாநகர சபையினால் பட்டியல் இட்டு சிபாரிசு செய்து அனுப்பிவைக்கப்பட்டிருந்த தேசத்திற்கு மகுடம் (தெயட்ட கிருல) மாநகர சபைக்குட்பட்ட வேலைத்திட்டங்களை எதிர்கட்சி சபையிடமிருந்து பறித்து எடுத்து பங்கு போடுவது போன்று இன்று ஆளும் கட்சி மாநகர சபையிலிருந்து பிரதியமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் பறித்தெடுத்து பங்கு போட்டு கொந்தராத்து செய்து வருகின்றனர்.

இவ்வாறு மட்டக்களப்பு மாநகர சபையின் வேறுபட்ட உரிமைகள் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றது. எனவே முதல்வர் அவர்கள் இவ்வாறு பறிக்கப்படும் உரிமைகளை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இச்சபை மூலம் வரி செலுத்தும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி மக்கள் பிரதிநிதிகள் சபையை பொறுப்பேற்ற காலம் ஒரு சுபிட்சமான காலமாக மக்களுக்கு அமைய வேண்டும்.

இத்தருணத்தில் இன்று மட்டக்களப்பு மாநகர சபையில் சமர்ப்பிக்கப்படும் 2013ஆம் அண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று பின்னர் சமர்ப்பிக்கப்படும் 5ஆவது வரவு - செலவுத்திட்டமாகும். கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் அனைத்து வரவு - செலவுத்திட்டத்திற்கும் தனது முழுமையான ஆதரவினை தந்துள்ளது என்பதை இத்தருணத்தில் ஞாபகமூட்டுவது பொருத்தமானதாகும். அந்த அடிப்படையிலும் சபையின் நலன் கருதியும் இவ்வரவு - செலவுத் திட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்குகின்றேன் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X