2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வாழ்வின் எழுச்சி சட்டமூலத்திற்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்புக்கு மகஜர்

Kogilavani   / 2013 ஜனவரி 03 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்வின் எழுச்சி சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திர சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் இணைப்பாளர்கள் சங்கம் ஆகியனவே இணைந்து இந்த மகஜரை கையளித்துள்ளன.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புக்கள் மகஜரை இன்று வியாழக்கிமை காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் சி.யோகேஸ்வரன் ஆகியோருக்கு கையளித்தன.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் எஸ்.மனோகிதராஜ் தலைமையில் இலங்கை சுதந்திர சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் இணைப்பாளர்கள் சங்கம், அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கங்களின் பிரதி நிதிகளே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் மட்டக்களப்பில் வைத்து சந்தித்து இந்த கடிதங்களை கையளித்தனர்
இந்த மகஜரில்,

இலங்கையில் வாழும் பதினெட்டு இலட்சத்தை அண்மித்த குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் காலத்தின் தேவைக் கருதியும் மிக நீண்ட காலமாக இலங்கை சமுர்த்தி அதிகாரசபையுடன் தொடர்புடைய சகல தொழில் சங்கங்களினதும் கோரிக்கைக்கமைய நாட்டு நலனுக்காக 'திவிநெகும' அபிவிருத்தி திணைக்களச் சட்டமூலத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தயார் செய்து நாடாளுமன்றத்திற்கு சமர்பித்துள்ளார்.

இச் சட்டமூலம் இதுவரை தாண்டிவந்த படிமுறைகளை பலப்படுத்துவதற்காக தாங்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் யோசனைகளுக்கும் கருத்துக்களுக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த 30 வருட கால கசப்பான அனுபவங்களின் பின் கட்டியெழுப்பப்படுகின்ற எமது நாடு சரியான வளர்ச்சிப்பாதையின் ஊடாக பயணிப்பதற்கேற்ற வகையில் இச்சட்ட மூலத்தின் ஏற்பாடுகள் காணப்படுகின்றன என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம். எனவே இச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தங்களை தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

ஓய்வூதியத் திட்டத்தினை எதிர்பார்த்து இலங்கை சமுர்த்தி அதிகாரசபையில் கடமையாற்றும் இருபத்தேழாயிரத்தை அண்மித்த உத்தியோகத்தர்களும் இதனால் பாரிய நன்மைகளைப் பெற உள்ளனர்.

இதற்கமைய சகல உத்தியோகத்தர்களினதும் தொழில் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களின் குடும்பங்களும் பாதுகாக்கப்படவுள்ளனர். மேலும்
அரச உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கும் சகல வரப்பிரசாதங்களையும் அவர்கள் அனுபவிக்க இருக்கின்றனர்.

குறைந்த வருமானம் பெறும் வறிய மக்களைப் பலப்படுத்தி அவர்களுக்குச் சிறப்பான பொருளாதாரப் பின்னணியினையும், சகல அந்தஸ்தினையும் இத்தினைக்களம் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. இத்துடன் உருவாக்கப்படும் 'திவிநெகும' சமுதாய அபிவிருத்தி வங்கி மற்றும் வங்கிச் சங்கம் கிராம மட்டத்திலிருந்து பங்கேற்பு அபிவிருத்தி அணுகு முறையூடாக சலுகை வட்டி வீதத்தில் குறு நிதிக் கடன்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற மக்களுக்குக் கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமாகும்.

இவ்வாறான ஏற்பாடுகளுடன் இச்சட்டமூலம் 2013.01.08 ஆம் திகதி நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இவ் விவாதம் நல்ல பயனுள்ள ஒரு கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பமாக அமையும் என நாங்கள் நம்புகின்றோம். இச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் எப்படியோ நிறைவேற்றப்படுவதை விட எல்லாக்கட்சிகளினதும்  நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் ஏகோபித்த சம்மதத்துடன் நிறைவேற்றப்படுமாயின் பலம் வாய்ந்த நாளைய தினத்திற்கு நல்லமுன் உதாரணமாக அமையும். இது நலன் பெறவிருக்கும் எங்கள் எல்லோரினதும் ஒருமித்த எதிர்பார்ப்பாகும்.

மேற்படி எங்களின் பணிவான வேண்டுகோளை கவனத்திற் கொண்டு 2013.01.8 ஆம் திகதி 'திவிநெகும' அபிவிருத்தி திணைக்கள சட்டமூலம் உங்களின் ஆதரவுடன் நிறைவேற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பினை கட்சி பேதமின்றி வழங்குமாறு கௌரவத்துடன் தங்களிடம் வேண்டுகின்றோம்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0

  • P.Sabeshan Thursday, 03 January 2013 04:20 PM

    இவ்விடயத்தில் ஆதரவு தெரிவிப்பது பாரிய பொறுப்பகும். சார்பாக‌ முடிவு எடுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X