2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளைத் துண்டாட முயலும் செயற்பாட்டை த.தே.கூ எதிர்க்கிறது: இரா.துரைரெட்ணம்

Kanagaraj   / 2013 ஜனவரி 13 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  வாகரை, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பல கிராமங்கள் கோரளைப்பற்று மத்தி மற்றும் கோரளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதி நிதிகள் முழு எதிர்ப்பைத் தெரிவிப்பதுடன் இது தொடர்பிலான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளையும் நடத்தி வருகிறது என த.தே,கூ இன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

கோரளைப்பற்று தெற்கு- கிரான், மற்றும் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து குறிப்பிட்ட கிராம சேவகர் பிரிவுகள் கோரளைப்பற்று மத்தி மற்றும் கோரளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலகங்களுடன் இணைப்பது தொடர்பில் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற எல்லை நிர்ணய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை கிழக்கு எனும் 211பி கிராம சேவையாளர் பிரிவின் ரிதிதென்ன, ஜயந்தியாய, ஓமடியாமடு, பாலம்பக்கேணி, ஆலங்குளம், புவனேசபுரம், மேலாண்டகுளம் ஆகியன கோரளைப்பற்று மத்;தியுடன் இணைக்கப்படுகிறது. இது சுமார் 12ஆயிரத்து 500க்கும் அதிகமான ஏக்கராகும்.

அதே போன்று, கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகனேரி எனும் 610 குடும்பங்களைக் கொண்ட 210ஆம் இலக்க கிராம சேவையாளர் பிரிவின் குளத்துமடு, குடாமுனைக்கல், குளவால்சேனை, பெட்டைக்குளம், புணானை மேற்கு 240 குடும்பங்களைக் கொண்ட  210 ஈ கிராம சேவையாளர் பிரிவின் புணானை, மயிலந்தனை, சாளம்பைச்சேனை, முள்ளிவட்டவான், புணானை அணைக்கட்டு ஆகிய கிராமங்கள் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுடனும் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளாகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பதுடன், இது தொடர்பில் ஆலோசனைகளை விரைந்து நடத்தி எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளோம். அத்துடன் இந்த இணைப்பு நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் மக்களது பிரதேசங்கள் முஸ்லிம் மக்களது பிரிவுகளுடன் இணைந்திருப்பதற்கு தமிழ் மக்கள் விரும்பமாட்டார்கள். மட்டக்களப்பில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசின் திட்டமிட்ட செயற்பாடாக இது அமைந்திருக்கிறது.  ஆந்த வகையில் இத்திட்டத்திற்கு யாரும் விலை போய்விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X