2026 மே 01, வெள்ளிக்கிழமை

எவரையும் இரண்டாம் பிரஜையாகக் கொள்ள இடமளியோம்: அமைச்சர் டலஸ்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 24 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித், ஜவீந்திரா


கிழக்கில் பிறந்த காரணத்தாலோ அல்லது தமிழனாகப் பிறந்த காரணத்தாலோ அல்லது பரீட்சையில் தோற்ற காரணத்தாலோ எவரையும் இத்தாய்நாட்டில் இரண்டாம் பிரஜையாகக் கொள்வதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோமென இளைஞர் விவகாரத்திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த நிலையில் தொழில் வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளின் நன்மை கருதி மாபெரும் இரண்டாம் நிலை தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு மட்டு. வின்சட் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இளைஞர் விவகாரத்திறன் அபிவிருத்தி அமைச்சும் இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்திச்சபையும் இணைந்து ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கு இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்திச்சபையின் தவிசாளர் விஜய விக்ரமரட்ன தலைமையில் நடைபெற்றது. 

க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகியவற்றில் கற்று பல்கலைக்கழகம் செல்லாத மற்றும் உயர்தர அனுமதி கிடைக்காத இளைஞர், யுவதிகள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

சான்றிதழ் கற்கைநெறி தொடக்கம் பட்டப்படிப்புவரை இரண்டாம்தர கற்கைகளூடாக இளைஞர், யுவதிகளின் ஆளுமையை விருத்தி செய்து அவர்களை சிறந்த தொழில்த் துறைக்குள் கொண்டுசெல்லும் வகையிலாக இக்கருத்தரங்கு அமைந்திருந்தது. 

இதன்போது பல்வேறு துறைசார்ந்த தொழில் வழிகாட்டல்கள் மேற்கொள்ளும் வகையில் தொழில்சார் நிபுணர்கள் கருத்துரைகளை வழங்கினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .