2021 ஜூலை 29, வியாழக்கிழமை

தாக்குதலுக்குள்ளான பெண் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பப் பெண்ணொருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதலுக்குள்ளான குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

செங்கலடி பிள்ளையார் கோயிலடியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான ஆறுமுகம் கமலநாயகி (வயது 40) என்ற குடும்பப் பெண்ணே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அயலவர்களின் உதவியுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே  நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்துள்ளதாக  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையிலேயே இச்சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் உயிரிழந்த இப்பெண்ணின் கணவர் தொழில் வாய்ப்பு பெற்று மத்திய கிழக்கிற்குச் சென்றுள்ளாரெனவும் இப்பெண்ணின் வீட்டிற்கு கைதுசெய்யப்பட்டுள்ள இச்சந்தேக நபர் அடிக்கடி வந்து செல்லுபவரெனவும் விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .