2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி

S.Renuka   / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின்  நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ (Suraksha) காப்புறுதித் திட்டத்தின் கீழ் நன்மைகளை வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம், சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள், 2025.11.26 முதல் 2025.12.31 வரையான காலப்பகுதியில் எதிர்கொண்ட சம்பவங்களுக்கான இழப்பீட்டு கோரிக்கைகள் மட்டுமே இங்கு பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட சலுகைகள்: பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு: அனர்த்தம் காரணமாகப் பெற்றோரை அல்லது சட்டரீதியான பாதுகாவலர்களை இழந்த மாணவர்களுக்கு, வருமான எல்லைகளைக் கருத்திற் கொள்ளாமல் நன்மைகள் வழங்கப்படும். (இதற்கு அனர்த்தத்தினால் பெற்றோர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்).

சிகிச்சைக்கான சலுகை: காப்புறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும், அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட விபத்துகளுக்காக நேரடியாகப் பெறப்பட்ட சிகிச்சைகள், மருந்து கொள்வனவுகள் மற்றும் பரிசோதனைக் கட்டணங்களுக்காக ரூ. 20,000.00 வரை வெளிவாரி சிகிச்சை நன்மைகள் வழங்கப்படும்.

ஆவணங்கள் சேதமடைந்திருந்தால்: 2025.11.01 முதல் 2025.11.26 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற சம்பவங்களுக்கான காப்புறுதி ஆவணங்கள் அனர்த்தத்தினால் சேதமடைந்திருந்தால், அதிபர் மற்றும் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையின் பேரில் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

தனியார் வைத்தியசாலை: பற்றுச்சீட்டுகள் சேதமடைந்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு வைத்தியசாலை: சிகிச்சை விபரத் துண்டுகள் (Diagnosis Card) சேதமடைந்திருந்தால், வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட நோயாளியின் விபரங்கள் அடங்கிய மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கால அவகாசம் நீடிப்பு: அனர்த்தம் காரணமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு, தற்போதுள்ள 90 நாட்கள் கால அவகாசத்துடன் மேலதிகமாக 60 நாட்கள் வழங்கப்பட்டு, மொத்தம் 150 நாட்கள் வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. (இது 2025.11.01 – 2025.12.31 வரையான விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்).

ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை இன்சூரன்ஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்த முடியாத பட்சத்தில், பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தல் கடிதத்தை கோருவதற்கு நிறுவனத்திற்கு அதிகாரம் உண்டு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .