2026 மே 06, புதன்கிழமை

விஷமிகளின் சூழ்ச்சிகளில் மக்கள் சிக்கிவிடக் கூடாது: பொலிஸ்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 03 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'சமீப சில நாட்களாக நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ஒரு சில தனிப்பட்டவர்கள் மேற்கொண்ட குழப்ப முயற்சிகள் அமைதி சீர்குலைவும் அச்சமும் பீதியும் ஏற்படக் காரணமாய் அமைந்து விட்டன. இத்தகைய நாசகார சக்திகளின் சதிகளுக்கு நாமும் பலியாக மீண்டும் இந்த நாட்டை அதல பாதாளத்திற்குக் கொண்டு செல்ல முடியாது.' என்று ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்பர தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய சமகால நிகழ்வுகளைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு ஏறாவூரில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு தொடர்ந்து விளக்கமளித்த அவர் 'சமீப சில நாட்களாக நாட்டில் இடம்பெற்று வந்திருக்கின்ற இன விரிசல்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் பற்றி விளக்கமளிக்குமாறு நான் பொலிஸ் மா அதிபரால் பணிக்கப்பட்டிருக்கின்றேன். கடந்த முப்பது வருட போராட்டத்தின் பின்னர் கடுமையான தியாகங்களின் மத்தியில்தான் இப்பொழுதுஇருக்கக் கூடிய இந்த சமாதானத்தைக் நாம் கொண்டு வந்திருக்கின்றோம்' என்றார்.

'யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணம் எவ்வாறான அபிவிருத்திகளைக் கண்டுள்ளது என்பதைப் பற்றி நீங்கள் வெளிப்படையாக அறிவீர்கள். தேசத்தின் மகுடம் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகரும் அபிவிருத்தியின் நன்மைகளை அடைந்துள்ளது. எதிர்வரும் காலங்களிலும் அரச நிறுவனங்கள் அதிகளவான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவிருக்கின்றன.

மார்க்கக் கடமைகளை, கலாசாரத்தை, பண்பாட்டு அம்சங்களை ஒழுகி நடக்கவும் தம் இஷ;டப்படி சட்டம் நீதியைக் கடைப்பிடித்து வாழவும் பூரண உரிமையுண்டு. இதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள்,  பறங்கியர் என்று சமய கலாசார பண்பாட்டு அம்சங்களின் படிபிரிந்து வாழ்ந்தாலும் நம் நாட்டிலுள்ள சட்டம், ஒழுங்கு, நீதி என்பவை நம் அனைவரையும் இணைத்து வைத்திருக்கின்றது.

நீதியின் முன் எல்லோரும் சமம்தான். நாட்டின் ஏனைய பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் அசம்பாவிதங்களைப் போல யாராவது இங்கும் குழப்பங்ளை ஆரம்பிக்க நினைத்தால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்' என்றார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .