2026 மே 07, வியாழக்கிழமை

ஏறாவூர் நகரசபையில் ஊழல் மோசடி இடம்பெறவில்லை: அலிசாஹீர் மௌலானா

Suganthini Ratnam   / 2013 மே 17 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஏறாவூர் நகர சபையில் ஊழல் மோசடி எதுவும் இடம்பெறவில்லை. ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ஒருவர் ஏறாவூர் நகர சபைக்கு அபகீக்த்தியை ஏற்படுத்தி வருகின்றார் என ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'ஏறாவூர் நகர சபையில் ஊழல் மோசடி இடம்பெறுவதாக ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு அறிக்கை விட்டிருந்தார். அவர் ஏறாவூர் நகர சபையின் கடந்த அமர்வின்போது ஊழல் மோசடிகள் இருப்பதாக தெரிவித்து உரையாற்றியதாகவும் அவர் அறிக்கைகளை விட்டிருந்தார்.

இது அப்பட்டமான பொய்யாகும் அவர் அந்த அமர்வில் அவ்வாறு உரையாற்றவில்லை.

ஏறாவூர் நகர சபையில் எந்தவொரு ஊழலும் மோசடிகளும் இடம்பெறவில்லை. நகர சபையின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனநாயக அடிப்படையில் வெளி;ப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருகின்றன. ஏறாவூர் நகர சபைக்கென ஒரு தனி மரியாதையும் கௌரவமும் உண்டு. அனைவராலும் இச்சபையின் நடவடிக்கைகள் பாராட்டப்பட்டு வருகின்றன. அதற்காக பல விருதுகளையும் இந்த நகர சபை பெற்றுள்ளது. ஏறாவூர் நகர சபை பிரிவில் என்றுமே இடம்பெறாத பாரிய அபிவிருத்தி பணிகளை நாம் இன்று மேற்கொண்டு வருகின்றோம்.

ஏறாவூர் புன்னக்குடா வீதி 18 கோடி ரூபா செலவில் பாரியளவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இந்த வீதியின் இரண்டு ஓரங்களிலும் வடிகான்கள் அமைக்கப்பட்டு கார்பட் வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. தேசத்திறகு மகுடம் திட்டத்தின் கீழ் 70 வீதிகள் போடப்பட்டு வருகின்றன. 6 கோடி ரூபா செலவில் நெல்சிப் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர சபை அலுவலகக் கட்டிடம் புனரமைக்கப்படவுள்ளது. அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 50 இலட்சம் ரூபா செலவில் சிறுவர் பூங்காவொன்றை நவீன முறையில் அமைத்து வருகின்றோம். அதேபோன்று 8 இலட்சம் ரூபா செலவில் ஏறாவூர் ஆற்றங்கரைப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. 25 இலட்சம் ரூபா செலவில் கூடைப்பந்தாட்ட மைதானமொன்றையும் ஏறாவூர் நகர சபைக்கு வெளியே நிறுவியுள்ளோம்.

இருளடைந்திருந்த ஏறாவூர் நகரத்தை இன்று ஒளியுள்ள நகரமாக மாற்றியுள்ளோம். இரவு நேரங்களில் ஏறாவூர் நகரத்திலுள்ள அனைத்து தெரு விளக்குகளையும் ஏறாவூர் நகர சபையினால் ஒளிரச் செய்துள்ளோம். இதனால் இரவு நேரங்களில் இங்குள்ள பெண்கள் அச்சமின்றி செல்லமுடியும். இவ்வாறு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து கொண்டு வரும் எங்கள் மீது இந்தச் சபையிலுள்ள ஒரு உறுப்பினர் மாத்திரம் எங்களுக்கு சேறு பூசுவதற்கு முனைகின்றார்.

இங்கு மேற்கொள்ளப்படும் அத்தனை வேலைத்திட்டங்களும் எமது அதிகாரிகளின் திட்டமிடலுடன் முறையான நிதிப்பிரமாணங்களின் அடிப்படையில் அனைத்து வேலைகளும் இடம்பெற்றுவருகின்றன.

எனது வாகனத்திற்கான எரிபொருள் செலவு பற்றி அந்த உறுப்பினர் குற்றம் சுமத்தியிருந்தார். ஏறாவூருக்கு வெளியே வாகனத்தில் கூட்டங்களுக்கும் நகர சபை விடயங்களை பார்ப்பதற்கு செல்வதற்காகவும் பெற்றோல் செலவுக்காக அதை பயன்படுத்துவதற்காகவும் நாங்கள் ஏறாவூர் நகர சபையிலும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளரிடத்திலும் மற்றும் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடத்திலும் அனுமதியை பெற்றுள்ளோம்.

ஏறாவூர் நகர சபையை நாம் பொறுப்பேற்கும்போது 2 இலட்சம் ரூபா மாத்திரமே இந்த சபையின் நிதியாக இருந்தது. இன்று அதை 7 மில்லியனாக அதிகரித்துள்ளோம். அத்தோடு; 25 இலட்சம் ரூபா பணம் இச்சபையின் நிலையான வைப்பிலுமுள்ளது. ஏறாவூர் நகர சபையின் கடந்த வருட வரவு - செலவுகள் அனைத்தையும் செலவை விட வருமானம் அதிகரித்துள்ளது. ஏறாவூர் நகர சபைக்கு நிரந்தமான வருமானத்தை ஏற்படுத்தும் வகையில் பல திட்டங்களையும் நாம்; முன்னெடுக்கவுள்ளோம்.

இந்த கட்டத்தில் தான் இந்த சபையின் உறுப்பினர் ஒருவர் இந்த சபைக்கு எதிராகவும் எனக்கு எதிராகவும் மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார். அந்த உறுப்பினர் இந்த சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை அடிக்கடி அச்சுறுத்தியுமுள்ளார். அவர்களின் கடமைக்கு தொந்தரவையும் ஏற்படுத்தி வருகின்றார். அவரின் இச்செயற்பாடுகளை ஏறாவூர் நகர சபை வன்மையாக கண்டிக்கின்றது.
அவர் ஏறாவூர் நகர சபையில் வகிக்கும் நிதிக்குழுவிலிருந்து அவரை நீக்குவதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம். அவருடைய பதவியை துஷ்பிரயோம் செய்து வருகின்றார்' என்றார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஏறாவூர் நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.தஸ்லீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .