2026 மே 06, புதன்கிழமை

கிழக்கில் இந்திய வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

Menaka Mookandi   / 2013 மே 22 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.ருத்ரன்


இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் இன்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை உள்ளடக்கியதான மூன்று கிராமங்களில் இந்த வீட்டுத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.

இந்தியத் தூதர் அசோக் கே. காந்தா, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், உற்பத்தித் திறன் விருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம்.சுபைர், ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன், முன்னாள் பிரதம மந்திரியின் ஆலோசகர் அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்ட பலரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் மங்களகம, பெரிய புல்லுமலை மற்றும் உறுகாமம் ஆகிய சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் கிராமங்களில் இந்த வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 46 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட ஐயாயிரம் வீடுகளில் முறையே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கு தலா 2 ஆயிரம் வீடுகளும் அம்பாறை மாவட்டத்திற்கு ஓராயிரம் வீடுகளும் நிர்மாணிக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .