2026 மே 09, சனிக்கிழமை

கூத்து நிகழ்ச்சியில் கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கு முதலிடம்

A.P.Mathan   / 2013 மே 25 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்
 
மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், டெங்கை ஒழிப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூத்து நிகழ்ச்சியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது.
 
மனிதரைக் கொல்லும் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட கூத்தாக இக்கூத்து தயாரிக்கப்பட்டது.
 
மக்கள் மத்தியிலே டெங்கு நோய் சம்பந்தமாக சுற்றாடலை சுத்தமாக பேணுவது தொடர்பாக ஆலோசனை கூறப்படும் வேளையில் ஒரு சிலர் ஒத்துழையாமை, எதிர்ப்பு தெரிவித்தல், விமர்சனம் செய்தல் போன்ற வகைகளால் குறித்த நோக்கம் எட்டப்படவில்லை. இதேபோன்ற ஒரு எண்ணக்கருவை மையமாக வைத்து டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே இந்த விசேட கூத்து டெங்கை ஒழிப்போம் எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டது.
 
முழுக்க முழுக்க வடமோடி நாட்டுக் கூத்தின் தாளக்கட்டை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பாத்திரங்களாக டெங்கு ஒழிப்பின் பிரசாரர்களாக விதாணையார், காளிகோயில் வண்ணக்கர், டெங்கு ஒழிப்புக்கு எதிராக தொழிற்படும் வதனகுமார் இவரது மகன் மாதவன், டெங்கு நுளம்பு, விதானையாரின் மனைவி மங்களம், வண்ணக்கரின் மனைவி வளர்மதி ஆகும்.
 
இந்த விசேட கூத்தானது 25 நிமிட நேரத்தைக் கொண்டது. குறைந்த நேரத்திற்குள் பல விடயங்களை உள்ளடக்கி இருப்பதுடன் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டமையினால் பார்வையாளர்களை  பரவசத்தில் ஆழ்த்தியது. மேற்படி மாகாண மட்டப் போட்டியின் போது மட்டக்களப்பு மாவட்டமும், அம்பாறை மாவட்டமும், திருகோணமலை மாவட்டமும் பங்கு பற்றியது.
 
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கதிரவெளி விக்ணேஸ்வரா மகா வித்தியாலயம் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. இவ் விசேட கூத்தில் மகிழ்ச்சி, சண்டை, சமாதானம், துன்பம் போன்ற காட்சிகள் காணப்படுகின்றமையினால் அனைவரையும் கவர்ந்துள்ளது.
 
இவ்விசேட கூத்தை தெருக்கூத்து பாணியிலும் மேடை ஏற்றக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விசேட கூத்து மாத்திரமன்றி இக்கூத்தின் தயாரிப்பாளரான பாடசாலை அதிபர் நா.சந்தரலிங்கம் ஏற்கனவே ஸ்ரேல் பயணம், Z புள்ளி, சாஸ் நோய், சுனாமிக் குழந்தை, எமது வாழ்வு எமது கையில் போன்ற விசேட கூத்துக்களை தயாரித்து வெற்றியிட்டுள்ளார்.
 
இப்பாடசாலை கோட்ட மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம் ஆகிய மட்டங்களில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகி அதிலும் முதலாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
இக்கூத்தின் வெற்றிக்கு பாடசாலை அதிபரிகள் அயராத உழைப்பும், கூத்து தயாரிக்கும் திறமையுமே இதற்கு காரணம் என பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .