
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
செங்கலடி – பதுளை வீதியில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக ஏறாவூர் மர ஆலைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்த ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று சனிக்கிழமை அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
லொறியின் சாரதி தப்பியோடியதாகவும் ஏனைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மரங்களை ஏற்றிவந்த லொறி தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறி மா லேகம் தெரிவித்தார்.
வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பொலிஸார் கலந்துகொண்டிருப்பதாக நினைத்து அதிகாலை வேளையில் மரக்குற்றிகள் ஏற்றிச் செல்லப்பட்டபோது வீதிப் பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிஸார் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்றவேளை வாகனத்தைக் கைவிட்டு சாரதி தப்பியோடியுள்ளார். அவரைத் தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
