2026 மே 06, புதன்கிழமை

'மகளின் மரணம் தொடர்பில் நீதியான தீர்ப்பை வழங்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2013 மே 27 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஜோர்தான் நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகக் கூறப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணின் மரணம் தொடர்பில் ஜோர்தான் அரசாங்கம் நீதியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்று இவரது தாயார் கையளித்துள்ள மகஜரில்  தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கறுவாக்கேணி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் காந்திமதி (வயது 21) என்பவரே ஜோர்தான் நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் ஜோர்தான் நாட்டின் இலங்கைக்கான தூதரகத்திற்கு மகஜர் ஒன்றை  அனுப்பி வைக்கும் முகமாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸிடம் இந்த மகஜரை இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளார்.

ஜோர்தான் நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகக் கூறப்படும் இந்தப் பெண்ணின் மரணத்தை கண்டித்து கறுவாக்கேணி பகுதியிலிருந்து பொதுமக்களுடன்  ஊர்வலமாகச் சென்றே இந்த மகஜரை மரணமான பெண்ணின் தாயார் கையளித்துள்ளார்.

இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

'எனது இரண்டாவது மகளாகிய நாகேந்திரன் காந்திமதி கடந்த 2010ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டுக்கு பணிப்பெண்ணாக தொழில் பெற்றுச் சென்றார்.

கடந்த 2013.05.08ஆம் திகதி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக தூதரகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது அத்துடன் அவரது சடலம் இந்த மாதம் 25ஆம் திகதி எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் எப்படி யாரால் ஏன் சுடப்பட்டார் என்பது பற்றி அறியத் தரவில்லை. ஏழைகளாகிய எமது பொருளாதாரக் கஷ்டம் காரணமாகவே பணிப்பெண்ணாக அவர் தொழில் செய்யச் சென்று இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார். எனவே எனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள்   கண்டுபிடிக்கப்பட்டு ஜோர்தான் நாட்டு அரசாங்கம்  நீதியான தீர்ப்பை  வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தான் நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகக் கூறப்படும் இந்தப் பெண்ணின் சடலம் கறுவாக்கேணி இந்து மையானத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .