2026 மே 07, வியாழக்கிழமை

பணி பெண் சுடப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்: சீ.யோகேஸ்வரன்

Kogilavani   / 2013 மே 27 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

வாழைச்சேனை கறுவாக்கேணியிலிருந்து ஜோர்தான் நாட்டுக்கு பணிபெண்ணாக சென்ற நாகேஸ்வரி காந்திமதி என்ற பெண் சுடப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்குமாறும் கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேராவுக்கு அவசரமாக தொலைநகல் மூலம் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேசத்தின் கறுவாக்கேணி கிராம அதிகாரி பிரிவில் வசித்த நாகேஸ்வரி காந்திமதி என்பவர் (கடவுச் சீட்டு இலக்கம் N4074616) பணிப்பெண் வேலைக்காக ஜோர்தான் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இவர், கடந்த 2013.5.6 ஆம் திகதியன்று சுடப்பட்டதாக கூறி, அவரது உடல் 2013.05.25ஆம் திகதி கட்டுநாயக்காவில் வைத்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

துப்பாக்கி ரவை நெஞ்சில் பட்டு இரத்தம் வெளியேறியதால் இவரது மரணம் சம்பவித்ததாக குறிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயம் தொடர்பாக அவரது பெற்றோர் சடலத்தை பொறுப்பேற்கும் முன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவரது பெற்றோர் மிகவும்; வறுமையானவர்கள் என்பதுடன், கல்வி ரீதியில் குறைந்த தகமை கொண்டவர்கள். 

ஆகவே தயவு செய்து இவ்விடயம் தொடர்பாக பூரண விசாரணையை ஜோர்தான் தூதரகம் மூலம் மேற்கொண்டு யார் இவரை சுட்டார் என்பதை வெளிப்படுத்தி, அவருக்கு தகுந்த தண்டணை கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

வறுமை காரணமாக ஜோர்தானுக்கு பணிப்பெண்ணாக சென்ற நாகேந்திரன் காந்திமதி என்பவரின் குடும்பத்தாருக்கு உரிய நஷ்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க முன்வருமாறு அன்பாக வேண்டுகின்றேன்' என அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம் மகஜரில் அப்பெண்ணின் இறப்பு சார்பாக ஜோர்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்கள் உட்பட்ட சகல விபரங்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படடுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .