2026 மே 07, வியாழக்கிழமை

மானியக்கூப்பன் காலம் தாழ்த்தி வழங்கப்படுவதால் மீனவர்கள் சிரமம்

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய டீசல் மானியக்கூப்பன் காலம் தாழ்த்தி வழங்கப்படுவதால் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.சி.எம்.முனவ்வர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடகாலமாக எரிபொருளின் விலை என்றும் இல்லாதவாறு அதிகரித்துக் காணப்பட்டதால் மீனவர்களின் நன்மை கருதி கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினால் எரிபொருள் மானியக் கொடுப்பனவுகள் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தினால் வழங்கப்படுகிறது.

ஆனால், ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட வேண்டிய மானியக் கூப்பன் சில மாத காலம் தாழ்த்தி வழங்கப்பட்டமையும் ஒவ்வொரு பிரதேசத்தின் அண்மையில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திற்கு மார்ச் மாதத்திற்குறிய மானியக் கூப்பன்களின் கணக்கு இலக்கம் மீன்பிடித் திணைக்களத்தினால் மாற்றப்பட்டு மே மாதம் வழங்கப்பட்டமையால் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்திற்கு முழுமையாக பணத்தினைச் செலுத்தி எரிபொருள் மானியம் மூலம் கிடைக்கும் நிவாரணத்தை பெறவேண்டியுள்ளது.

ஆனால், கடற்றொழிலில் ஈடுபடும் வறிய மீனவர்களுக்கு சாத்தியமில்லாத கஷ்டமான நிலையினை தோற்றுவித்திருப்பதோடு மீனவர்களுக்கான ஏப்ரல் மே மாதங்களுக்குறிய மானியம் வழங்கப்படாமையால் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கூடுதலான பணத்தினை எரிபொருளுக்கு மாத்திரம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாளாந்தம் கடற்றொழிலில் ஈடுபடும் சில சிறிய, பெரிய மீன்பிடிப் படகுகளுக்கான டீசல் மானிய முத்திரை முற்றாக தடைப்பட்டமையும் முப்பது வருடகால யுத்த சூழ் நிலையில் வாழ்ந்த மீனவர்களுக்கு பாரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர் எனவும் அவ் அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .