2026 மே 07, வியாழக்கிழமை

தற்காலிக இடமாற்றமா?, நிரந்தர இடமாற்றமா?: அதிபர்கள் திண்டாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 05 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மூன்று பாடசாலைகளுக்கு அதிபர்களாக மூவருக்கு தற்காலிக இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை, நிரந்தர இடமாற்றக் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டமையால் என்ன  செய்வதென்று தெரியாமல் அந்த மூவரும் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

மட்டக்களப்பு, மத்தி கல்வி வலயம் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் இருவருக்கும் ஆசிரியை ஒருவருக்குமே நிரந்தர அதிபர் இடமாற்றம் செய்யும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதே திகதியிட்டு தற்காலிக இடமாற்றக் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காங்கேயனோடை ஹிஸ்புல்லா வித்தியாலய அதிபர் ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலயத்திற்கும் காங்கேயனோடை இக்றா வித்தியாலய அதிபர்  பாலமுனை இக்றா வித்தியாலயத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல, பாலமுனை அக்ரம் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் காங்கேயனோடை இக்றா வித்தியாலயத்திற்கு  அதிபராக  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

16.4.2013 அன்று திகதியிடப்பட்ட நிரந்தர அதிபர் இடமாற்றத்திற்கான கடிதம்  மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமட் லெவ்வை என்பவரின் பெயருடன் வலய நிர்வாகத்திற்கான பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.நசீறாவின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டன.

அந்த வகையில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் மேற்படி கடிதத்தின் படி  இந்த பாடசாலைகளில் இவர்கள் மூவரும் நிரந்தர அதிபர்களாக கடமைகளை பொறுப்பேற்றனர்.

பதவியை பொறுப்பேற்றது தொடர்பிலான கடிதங்கள் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த கடிதம் உறுதிப்படுத்தி மீண்டும் அதிபர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுடன், நிரந்தர அதிபர்களாக பொறுப்பேற்றுள்ள பாடசாலைகளுக்கு அவர்களின் சம்பளங்களும் அனுப்பப்படவில்லை.

இந்நிலையில் 16.4.2013 திகதியிட்டு மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அவலகத்தினால் தற்காலிகமான இடமாற்றமெனத் தெரிவித்து மீண்டும் ஒரு கடிதம் 03.6.2013 திங்கட்கிழமை இந்த அதிபர்களுக்கே அனுப்பப்பட்டுள்ளது.

அதேநேரம் முன்பு அனுப்பிய நிரந்தர அதிபர் இடமாற்றக் கடிதத்தை வலய அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தினால் அதிபர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்க முயற்சித்தபோதும் தொடர்பு கிடைக்கவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .