2026 மே 09, சனிக்கிழமை

மட்டு. கோயில் கொள்ளை விவகாரத்தில் பொலிஸார் மௌனம் ஏன்?: யோகேஸ்வரன் எம்.பி

Menaka Mookandi   / 2013 ஜூன் 17 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில காலங்களாக இடம்பெற்று வந்த ஆலய விக்கிரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, களவாடப்பட்ட பொருட்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்விடயமாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளாது ஏன் மௌனம் சாதிக்கின்றனர்' என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடந்த சில காலங்களாக ஆலயங்களில் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பல ஆலயங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன. அதேபோன்று அம்பாறை, திருகோணமலை போன்ற வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள ஆலயங்களிலும் இவ்வாறான ஆலயக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கொள்ளைகள் சார்பாக ஆலய தர்மகர்த்தாக்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று முறையிட்டுள்ளனர்.  பொலிஸார்கள் ஆலயங்களுக்கு வருகின்றார்கள். அவர்கள் கைவிரல் அடையாளங்களையும் எடுக்கின்றார்கள். ஆனால் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற எந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாகவும் ஆலய விக்கிரம் உடைக்கப்பட்டவை தொடர்பாகவும் எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் இடம்பெறுவதும் இல்லை' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'கடந்த வருடம் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் பெருந்தொகையான நகைகள் இரவு வேளையிலே களவாடப்பட்டது. ஆனால் அதன் முறைப்பாடு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் உண்டு. ஆனால் இதுவரை எந்தவித விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை.

நானும் இவ்விடயமாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் இதுசார்பாக முறைப்பாட்டை செய்திருக்கின்றேன். ஆனால் இதுசார்பாக எந்த நடவடிக்கையையும் இன்னும் காணவில்லை' என்றும் யோகேஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டினார்.

'அண்மையிலே எல்லோருக்கும் தெரிந்த விடயம் குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலயம், மாங்காடு பிள்ளையார் ஆலயத்திலும் இந்து விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு, தங்க இயந்திரத் தகடுகள் மற்றும் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தது. அத்தோடு குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.

இச்சம்வம் தொடர்பாக அங்கு வந்த பொலிஸார், விசாரணைகளுக்காக கைவிரல் அடையாளங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு சென்றார்கள். ஆனால் இதுவரை எந்தவித விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலைமை நீடித்துச் செல்கின்றது' என்றார்.

ஆகவே நாங்கள் இதைப்பற்றிச் சிந்திக்கும் போது யுத்த காலத்திலே இச்சம்பவம் இடம்பெறவில்லை. தற்போதைய காலத்திலே இவ்வாறான சம்பவம் இடம்பெறுகின்றமை இந்து மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு உகந்தை முருகன் ஆலய வியடம் சார்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கூறியிருக்கின்றார்.

உகந்தை முருகன் இருக்கின்ற காணியை விட்டு விட்டு மிகுதியாக இருக்கின்ற காணியில் விகாரையை தாபிக்கலாம் என்று. பிக்கு திரும்பவும் வந்து கேட்டால் கொடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் விகாரைக்கு வழங்கும் இடம் பௌத்த மக்கள் வாழாத இடமென்றால் இவ்விகாரை தேவையற்றது' என்று யோகேஸ்வரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .