2026 மே 09, சனிக்கிழமை

dd

இரு மதக் குழுக்களுக்கிடையிலான மோதல் சுமூகமாக தீர்த்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 19 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டசுங்காங்கேணி கிராமத்தில் இரண்டு மதக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்ச் சம்பவமானது மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் முயற்சியினால் சமாதானமாகவும் சுமூகமாகவும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சுங்காங்கேணி கிராமத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை சென்ற மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பில் உள்ள சமதானத்திற்கான சமயங்களின் பேரவையின் முக்கியஸ்தர்கள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராசா தெரிவித்தார்.  

கடந்த 16ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுங்காங்கேணி கிராமத்தில் இரண்டு மதக் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.

சுங்காங்கேணி ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகத்தை  முன்னிட்டு காலையில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை,  சுங்காங்கேணி மெதடிஸ் திருச்சபையில் ஒலிபெருக்கியில் ஜெப வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், மெதடிஸ் திருச்சபையில் ஒலித்துக்கொண்டிருந்த ஒலிபெருக்கியை  நிறுத்துமாறு இந்துக் கோவிலிருந்து சென்றவர்கள் கூறியபோதே மோதல் ஏற்பட்டது. இதன்போது 6 பேர் காயமடைந்ததுடன்,  மெதடிஸ் திருச்சபையும் சேதமாக்கப்பட்டது.

இந்த மோதல்ச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராசா,  இலங்கை சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களான அருட்தந்தை சுவாமிநாதன், அருட்தந்தை ஜெறாட், அருட்தந்தை இராஜேந்திரா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன், வடக்கு, கிழக்கு மெதடிஸ் திருச்சபைகளின் பிரதமகுரு அருட்தந்தை தயாசீலன், சுங்காங்கேணி ஸ்ரீசித்தி விநாயகர் கோவில் தலைவர் கோபாலசிங்கம், சுங்காகங்கேணி பாடசாலையின் அதிபர், ஆலய நிர்வாகிகள் உட்பட அந்தக் கிராமத்து  மக்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .